வட மாநிலத்தவர் விவகாரம்.. வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ்.. முன்ஜாமீன் கோரி மனு
வட மாநிலத்தவர் விவகாரத்தில் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: வட மாநிலத்தவர் விவகாரத்தில் உத்தரப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாகவே வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி இளைஞர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அதிக ஊதியம், வேலை நிச்சயம் கிடைக்கும் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் இங்கு வருகிறார்கள்.
கொரோனா சமயத்தில் சொந்த ஊர் திரும்பியவர்களைக் காட்டிலும் இப்போது கூடுவதாகப் பலரும் இங்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கு எவ்வித பிரச்சினையும் இருப்பதில்லை.

வட மாநில தொழிலாளர்கள்
பெரும்பாலும் ஹோட்டல் மற்றும் கட்டிட வேலைகளிலேயே வட மாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். தமிழர்கள் இதுபோன்ற வேலைகளில் பெரியளவில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் இதன் காரணமாகவே இதுபோன்ற வேலைகளுக்கு வட மாநில இளைஞர்களை பணியமர்த்துவதாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் விளக்கமளித்துள்ளனர். இந்த துறைகளில் நமக்கும் அதிக நபர்கள் தேவை என்பதால் வட மாநில இளைஞர்கள் தேவைப்படவே செய்கிறார்கள்.

போலி தகவல்
இந்தச் சூழலில், சில நாட்களாகவே இணையத்தில் உண்மைக்குப் புறம்பான பொய்யான தகவல்கள் பரவி வந்தன. வட மாநில இளைஞர்களைச் சிலர் தாக்குவது போன்ற பொய்யான வீடியோக்களை சிலர் திட்டமிட்டுப் பரப்பினர். தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பினர். இது தமிழ்நாட்டில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், வட மாநில ஊழியர்களின் உறவினர்கள் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் நிலையில், அவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பாஜக நிர்வாகி
இந்த விவகாரத்தில் இரு மாநில அரசும் தெளிவாக விளக்கமளித்தே வருகிறது. வேறு மாநிலங்களை நடந்தவை, பழைய சம்பவங்களை இப்போது தமிழ்நாட்டில் நடந்ததை போலப் பரப்பினர். பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் என்பவர் தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக 12 வட மாநில தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டதாகப் பொய்யான தகவலைப் பரப்பினர்.. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்த அவர், பீகார் தொழிலாளர்கள் தாக்குதல்கள் நடந்தபோதிலும், தேஜஸ்வி யாதவ் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார் என்று பதிவிட்டிருந்தார்.

கைது செய்ய நடவடிக்கை
அந்த ட்வீட்டிற்கு பிறகே இது பரபரப்பைக் கிளப்பியது. அதன் பிறகு சில வட மாநில ஊடகங்களும் கூட இந்த விவகாரத்தில் செய்திகளை வெளியிட்டன. இதுபோல பொய்யான தகவல்களைப் பரப்பியோர் மீது தமிழ்நாடு போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பொய்யான தகவல்களைப் பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் மீது தமிழ்நாடு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவான நிலையில், அவரை கைது செய்யத் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான தனிப்படை டெல்லி விரைந்துள்ளனர்.

முன்ஜாமீன் மனு
இந்தச் சூழலில் உத்தரப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். உம்ராவ் இப்போது ட்வீட்டை நீக்கியுள்ள நிலையில், அவர் தான் நிரபராதி என்றும் போலி செய்திகளால் தான் பலிகடா ஆக்கப்பட்டேன் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், முக்கிய ஊடகங்கள் மற்றும் மற்ற பிரமுகர்கள் சொல்லப்பட்ட செய்திகளே கவலையளிப்பதாகவே குறிப்பிட்ட மேற்கூறிய ட்வீட்டை பகிர்ந்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மனுவை நீதிபதி ஜஸ்மீத் சிங் நாளை செவ்வாய்க்கிழமை விசாரிக்கிறார்.












Click it and Unblock the Notifications