கெஜ்ரிவாலை கைவிடும் மிடில் கிளாஸ்! ஆம் ஆத்மி தோல்விக்கு என்ன காரணம்! டெல்லி தேர்தல் உணர்த்துவது என்ன
டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த இரு தேர்தல்களில் ஆம் ஆத்மி வெல்ல முக்கிய காரணமே மிடில் கிளாஸ் மக்களும் பூர்வாஞ்சலி வாக்காளர்களும் தான். ஆனால், இந்த முறை அவர்களின் ஆதரவு அப்படியே பாஜகவுக்குச் சென்றுள்ளது. இதன் காரணமாகவே பாஜகவால் மிக எளிதாக அங்கே ஆட்சியைப் பிடிக்க முடிந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டெல்லியில் இப்போது சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. கெஜ்ரிவால் 3வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார்.

கடந்த பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடந்த சூழலில், இப்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் அதிர்ச்சி தரும் விதமாக ஆம் ஆத்மி படுதோல்வியை சந்தித்துள்ளது. அங்கு பாஜக ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.
பாஜகவுக்கு ஆதரவு:
கடந்த 2015 மற்றும் 2020 தேர்தல்களில் ஆம் ஆத்மி மிகப் பெரியளவில் வென்று ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர்கள் அங்குள்ள மிடில் கிளாஸ் மக்களும் பூர்வாஞ்சலி வாக்காளர்களும் ஆவர். இவர்கள் ஆதரவு இருந்ததாலேயே கெஜ்ரிவாலால் எளிதாக ஆட்சியை பிடிக்க முடிந்தது. ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது இவர்களின் ஆதரவு பாஜக பக்கம் வந்துவிட்டதாகவே தெரிகிறது.
இதன் காரணமாக அங்கு சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவால் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது. கிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி, மத்திய டெல்லி மற்றும் புது டெல்லி என்று நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் உள்ள தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதேபோல பூர்வாஞ்சலி வாக்காளர்கள் (கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள்) அதிகம் உள்ள 25 இடங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. பாஜக வெற்றிக்கு அவர்களின் வாக்குகள் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
கடும் போட்டி:
புது டெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் கூட எளிதாக வெல்ல முடியவில்லை. கடந்த இரு தேர்தல்களில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் கெஜ்ரிவால் எளிதாக வென்ற நிலையில், இந்த முறை பாஜகவின் பர்வேஷ் வர்மா கடும் போட்டியைத் தந்து வருகிறார். இதுவே மக்கள் மனநிலை எந்தளவுக்கு மாறியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
கெஜ்ரிவாலை பொறுத்தவரை 2013ம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் ஷீலா தீட்சித்தை 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். ஆம் ஆத்மி- காங்கிரஸ் இணைந்து, 2013ல் ஆட்சி அமைத்த நிலையில், ஜன் லோக்பால் மசோதா விவகாரம் காரணமாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 49 நாட்களில் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து 2015, 2020 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் ஆம் ஆத்மி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைத்தது. ஆம் ஆத்மியின் இந்த அசுர வளர்ச்சி மிடில் கிளாஸ் மக்களின் வாக்குகளே பிரதான காரணமாக இருந்தது. அது இப்போது ஆம் ஆத்மிக்கு இல்லாமல் போனதே தோல்விக்குக் காரணமாக உள்ளது.

மிடில் கிளாஸ்
டெல்லியில் சுமார் 40% வாக்காளர்கள் மிடில் கிளாஸ் மக்களாக உள்ளனர். படித்த, நல்ல வேலையில் இருக்கும் இந்த மிடில் கிளாஸ் மக்களே டெல்லியில் யார் ஆட்சியை அமைக்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. கடந்த இரு தேர்தல்களிலும் மிடில் கிளாஸ் மக்களின் மிகப் பெரிய ஆதரவு ஆம் ஆத்மிக்கு இருந்தது. ஆனால், இப்போது அவர்கள் ஆம் ஆத்மி மீது அதிருப்தியில் இருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
மேலும், கடந்த வாரம் பட்ஜெட் சமயத்தில் இந்த மிடில் கிளாஸ் மக்களைக் குறிவைத்த வருமான வரி விலக்கு உச்சவரம்பும் உயர்த்தப்பட்டது. ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்போர் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்த சூழலில், அதுவும் கூட தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications