தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பாஜகவுக்கு எத்தனை இடம்? தென்னிந்திய கட்சிகளை ‘தெறிக்க’விடும் அமித்ஷா!
டெல்லி: தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில் பாஜக மட்டுமே மிக அதிகமான இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ராமர் கோவில் விவகாரத்தில் அரசியல் வெற்றி, தோல்வி என்பது எதுவும் இல்லை. பாஜகவைப் பொறுத்தவரையில் ராமர் கோவில் விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே பல கோடி மக்களின் நம்பிக்கைதான் முக்கியமானதாகும். தேர்தல்களின் போது ராமர் கோவில் விவகாரம் முதன்மை பிரச்சனையாக்கப்பட்டிருக்கிறது. ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டுமொத்த "இண்டி" கூட்டணியும் புறக்கணித்தது. இத்தனைக்கும் அனைவருக்கும் நாங்கள் அழைப்பிதழ் அனுப்பினோம். ஆனால் சிறுபான்மை வாக்கு வங்கியை மட்டுமே "இண்டி" கூட்டணி தலைவர்கள் கவனத்தில் கொண்டிருந்தனர்.

மமதா பானர்ஜி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியைப் பொறுத்தவரையில் வன்முறைகளை தொடங்கி வைப்பார். பின்னர் அமைதி காப்பார். மீண்டும் வன்முறைகளை ஏவிவிடுவது என்பதை ஒரு பாணியாக வைத்திருக்கிறார். சந்தேஷ்கலி வன்முறை சம்பவங்கள் நல்ல எடுத்துக் காட்டு. ஒரு பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்த்தப்படும் போது அமைதியாக இருக்கலாமா? உயர்நீதிமன்றமே தலையிட்ட பின்னரும் கூட மேற்கு வங்க போலீசார் இப்போது வரை விசாரணையை நடத்தவே இல்லையே? சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டிருப்பது மமதாவுக்குதான் அவமானம்.
லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக 24 முதல் 30 இடங்களில் நிச்சயம் வெல்லும்.
முஸ்லிம் இடஒதுக்கீடு: பாஜக நாடு முழுவதும் 400க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும். இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தால் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் செய்திருப்போம். எங்களைப் பொறுத்தவரையில் இந்த நாட்டில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு இருக்கவே கூடாது என்பதுதான். இதனை அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
காங்கிரஸ் வாக்குறுதிகள்: காங்கிரஸ் வாக்குறுதிகளை சைனீஷ் வாக்குறுதிகள்- நம்பகத்தன்மையில்லாதவை என விமர்சிக்கிறோம். ஏனெனில் தெலுங்கானாவுக்கு அண்மையில் சென்றிருந்த போது பெண்கள் தங்களுக்கான உதவித் தொகையான ரூ12,000-க்கு இன்னமும் காத்திருக்கிறார்கள். ரூ2 லட்சம் கடன் தள்ளுபடிக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். ஸ்கூட்டிகளுக்காக இளம் பெண்கள் காத்திருக்கின்றனர். இவை எல்லாம் ராகுல் காந்தியால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள். ஆனால் தெலுங்கானாவில் இவற்றை எல்லாம் நிறைவேற்ற முடியவில்லையே.
ராகுல் காந்தி: தேர்தல்களில் யார் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் இதனை தேர்தலுக்கு முன்னரே ராகுல் காந்தி சொல்லி இருக்க வேண்டும். இதை ஏன் ராகுல் காந்தி மறைக்க வேண்டும்? வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட போதே ராகுல் காந்தி மக்களிடம் மறைக்காமல் ரேபரேலியில் போட்டியிடுவதாக சொல்லி இருக்க வேண்டும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு என்பது பாஜகவின் நிலைப்பாடு மட்டும் அல்ல. இந்த தேசத்தின் நிலைப்பாடும் அதுவேதான். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகள், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டால் அணு குண்டுகளை அந்த நாடு வீசும் என கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசுவது பற்றி ராகுல் காந்தி என்ன சொல்லப் போகிறார்? அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டுக் கொடுக்க வேண்டுமா? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் நிச்சயமாக இணைக்கப்படும்.
தென்னிந்தியாவில் பாஜக: தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா என 5 தென் மாநிலங்களில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என கூறியிருந்தேன். ஜூன் 4-ந் தேதிக்குப் பின்னர் நிச்சயம் தென்னிந்திய மாநிலங்களில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அமித்ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications