பாஜக தோல்வி அடையும்! பிரதமர் வேட்பாளர் அறிவிக்காதது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவா? டிஆர் பாலு பரபர
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும். பெரும்பான்மை பெறக்கூடிய எண்ணிக்கையை இந்தியா கூட்டணி நிச்சயம் பெறும் என்று திமுகவின் டிஆர் பாலு டெல்லியில் கூறினார்.
லோக்சபா தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மத்தியில் 3 வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா கூட்டணி தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்தனர்.

பாஜக கூட்டணி இந்த லோக்சபா தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பி வருகின்றனர். இந்த நிலையில், இன்று டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், திமுகவின் டி ஆர் பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலை எதிர்கொண்ட விதம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்தும் விவாதம் செய்யப்பட்டது. தொடர்ந்து கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஆர் பாலு இந்தியா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறினார். டி ஆர் பாலு கூறியதாவது:-
லோக்சபா தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும். பெரும்பான்மை பெறக்கூடிய எண்ணிக்கையை இந்தியா கூட்டணி நிச்சயம் பெறும். கட்சி வாரியாக வெற்றி பெற்ற விவரங்கள் உடனே ஜனாதிபதியிடம் அளிப்போம். பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக இருக்காது. பிரதமர் யார் என்பது ஜூன் 4 ஆம் தேதி இரவு அல்லது 5 ஆம் தேதி காலை முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications