35=1 ஃபார்முலா.. ஹரியானாவில் காங்கிரஸே நினைத்து பார்க்க முடியாத டிரிக்ஸ்.. பாஜக ஜெயித்தது எப்படி?
டெல்லி: ஹரியானாவில் பாஜக பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் பெரும்பான்மையான மக்களான ஜாட் மற்றும் தலித் சமூக வாக்குகளை அதிகமாக நம்பிய காங்கிரஸ் கட்சிக்கு, அதற்கு ஈடாக 35 சாதிகளை ஒருங்கிணைத்து வாக்குகளை பெற்றுள்ளதாம் பாஜக.. 35=1 என்ற பாஜகவின் ஃபார்முலா இந்த முறை ஒர்க்கவுட் ஆகி உள்ளதாக செய்தியாளர்கள் சொல்கிறார்கள்.
பா.ஜனதா ஆளும் ஹரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா, அங்கே ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கி உள்ளது. அதேநேரம் 10 ஆண்டுகளாக அதிகாரத்தை இழந்திருந்த காங்கிரசோ, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வேகத்தில் வேலை செய்தது.

இந்த இரு கட்சிகளை தவிர ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜே.ஜே.பி-ஆசாத் சமாஜ் கூட்டணி என பலமுனை போட்டி காணப்பட்டது. எனினும் பெரும்பாலான இடங்களில் பா.ஜனதா-காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி இருந்தது வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரியவந்துள்ளது.
இந்த தேர்தலில் ஆரம்ப கட்ட நிலவரப்படி முன்னிலை வகித்த காங்கிரஸ் கட்சி, அதன்பிறகு பின்னடைவை சந்தித்துள்ளது. பிற்பகல் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின் படி, பாஜக 49 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜகவின் முன்னிலை நிலவரம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது.
ஹரியானாவில் முன்னிலை நிலவரங்கள் ஒருபுறம் இருந்தாலும், சாதி ரீதியாக மக்களை ஒருங்கிணைப்பதில் பாஜக மிகப்பெரிய வியூகத்தை கையில் எடுத்ததாகவும், அதற்கு கைமேல் பலன் கிடைத்திருப்பதாகவும் ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் பிரவீன் டோக்ரா ஹரியானாவின் அரசியல் பற்றி விரிவாக பேசும் போது, சில விஷயங்களை குறிப்பிட்டார். அதாவது பிஜேபியின் 35=1 வியூகம் வேலை செய்திருக்கிறது என்றார்.
ஹரியானா மாநிலத்தில் ஜாட்களுக்கு எதிராக 35 சாதி குழுக்களை ஒருங்கிணைப்பதில் பாஜக தீவிரமாக வேலை செய்தது. அதேசமயம் ஜாட் மற்றும் தலித்துகள் ஒருங்கிணைப்பை காங்கிரஸ் நம்பி இருந்தது. இந்தப் போக்குகள் முடிவுகளை மாற்றி இருந்தாலும், ஜாட் வாக்குகள் சரியாக கிடைக்காத சூழலிலும் ஹரியானாவில் பாஜகவின் 35=1 வியூகம் கைக்கொடுத்துள்ளது எனறு ஊடகவியாளர் பிரவீன் டோக்ரா கூறினார்.












Click it and Unblock the Notifications