தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் பிஆர் கவாய்.. யார் இவர்?
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தலைமை நீதிபதியாக மே மாதம் 14ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இதன்மூலம் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பில் அமரும் 2வது நபர் என்ற பெருமை பிஆர் கவாய்க்கு கிடைக்க உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இருக்கிறார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. மே மாதம் 13ம் தேதியுடன் சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெற உள்ளார்.

இதையடுத்து புதிய தலைமை நீதிபதி நியமனம் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்தார். கடந்த 16ம் தேதி சஞ்சீவ் கண்ணா எழுதிய கடிதத்தில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் நியமிக்கலாம் என்று பரிந்துரை செய்தார்.
இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாயை நியமித்து நேற்று ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து பிஆர் கவாய் வரும் மே மாதம் 14ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். அதன்பிறகு 6 மாதம் வரை தலைமை நீதிபதியாக செயல்பட்டார். 2025 நவம்பர் 23ம் தேதி வரை இந்த பொறுப்பில் செயல்படுவார். அதன்பிறகு பணி ஓய்வு பெறுவார்.
இந்நிலையில் தான் பிஆர் கவாய் யார்? பின்னணி என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது பிஆர் கவாயின் முழுப்பெயர் பூஷண் ராமகிருஷ்ணா கவாய். இதனை சுருக்கி தான் பிஆர் கவாய் என்று அழைக்கப்படுகிறார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்தவர். 1960 நவம்பர் 24ம் தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர் ஆர்எஸ் கவாய். இவர் அரசியல்வாதியாக இருந்தார். அதோடு பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் செயல்பட்டார். இவர் பீகார், கேரளா ஆளுநராக பணியாற்றி இருந்தார். இப்போது மறைந்துவிட்டார்.
பிஆர் கவாய் கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமகிக்கப்பட்டார். 2005ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி நிரந்தர நீதிபதியானார். அதன்பிறகு 15 ஆண்டுகள் வரை மும்பை, நாக்பூர், அவுரங்காபாத், பானஜி நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டார்.
பிஆர் கவாய் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இதற்கு முன்பு தலித் சமுதாயத்தை சேர்ந்த கேஜி பாலகிருஷ்ணன் பொறுப்பு வகித்தார். அதற்கு பிறகு 2வது நபராக பிஆர் கவாய் அந்த பொறுப்பை அலங்கரிக்க உள்ளார். பிஆர் கவாய் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட தொடங்கினர். இப்போது அவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பை எட்டி பிடித்துள்ளார்.
இவர் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் வழங்கிய அமர்வில் பிஆர் கவாய் இடம்பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications