Budget 2022 : இனி தபால் நிலையங்களிலும் நெட் பேங்கிங்.. நிதியமைச்சர் நிர்மலாவின் அசத்தல் அறிவிப்பு
டெல்லி : அனைத்து தபால் நிலையங்களும் கோர் பேங்கிங் அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள் தொடங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் சுமார் மிகக் குறைந்த நேரத்தில் பட்ஜெட்டினை அவர் தாக்கல் செய்தார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக சேவைத்துறை, வங்கித்துறைகளில் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் இருக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

பட்ஜெட் 2022
காலை 11 மணியளவில் பட்ஜெட் உரையினை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், காகிதமில்லா பட்ஜெட்டை இரண்டாவது முறையாக டேப்பில் வாசித்தார். சுமார் 90 நிமிடங்களில் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்த நிலையில், இதுதான் மிக குறைந்த நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டில் ராணுவ தளவாட உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு ஊக்குவிக்கப்படும், ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் 67 சதவீதம் நிதி உள்நாட்டு தயாரிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவித்தார் நிர்மலா சீதாராமன்.

புதிய அறிவிப்புகள்
இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி ஒளி வரை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்பட்டு என தனது உரையில் குறிப்பிட்ட அமைச்சர், நில ஆவணங்களை கணினிமயமாக்கி, 'ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு' திட்டம் ஊக்குவிக்கப்படும் என கூறினார். மேலும் நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள் உருவாக்கப்படும் எனவும், தபால் நிலையங்கள் வங்கிகளுடன் இணைக்கப்படும் என்றார்.

தபால் நிலையங்களில் கோர் பேங்கிங்
பட்ஜெட் 2022 நிதி உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துகிறது என்று கூறிய நிர்மலா சீதாராமன் , இந்த ஆண்டு அனைத்து தபால் நிலையங்களும் கோர் பேங்கிங் எனப்படும் வங்கிக்கிளைகள் கணினியால் ஒருங்கிணைக்கப்படும் முறையில் இணைக்கப்பட்டு இந்த சிஸ்டம் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறினார். இதன் மூலம், அஞ்சலக கணக்கு வைத்திருப்பவர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளையும், நெட் பேங்கிங் மூலம் மற்ற வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்ற முடியும் என தெரிவித்தார்.
Recommended Video

விவசாயிகள் பயன்பெறுவர்
இந்தியாவில் உள்ள அனைத்து 1.5 லட்சம் தபால் நிலையங்களும் கோர் பேங்கிங் அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும் எனவும், இது நிதிச் சேர்க்கை மற்றும் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏடிஎம்கள் மூலம் கணக்குகளை அணுகுவதற்கும், தபால் அலுவலகக் கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளுக்கு இடையே ஆன்லைன் பணப் பரிமாற்றத்தையும் வழங்கும் என கூறினார். இந்த திட்டம் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவிகரமாக இருக்கும் எனவும், இயங்குதன்மை மற்றும் நிதி உள்ளடக்கத்தை செயல்படுத்தும் எனவும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications