Budget 2024: இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம்.. வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு!
டெல்லி: 2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதோடு, கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கும் திட்டத்தை 5 மாநிலங்களில் அமல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப்.1ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் நடப்பாண்டில் லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டதால், கடந்த பிப்.1ல் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்பின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி 3வது முறையாக ஆட்சியமைத்தது.

தொடர்ந்து நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில் மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதில் வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் வேளாண் துறைக்கு ரூ.1.26 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டப்பட்டது.
இம்முறை 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 0.27 சதவிகிதம் அதிகரித்து ரூ.1.52 லட்சம் கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை விவசாயம் செய்ய 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது. அதேபோல் வேளாண் துறையில் டிஜிட்டல் மயம் புகுத்தப்படும் என்றும், டிஜிட்டல் முறையில் காரிப் வேளான் பொருட்கள் தொடர்பான சர்வேஎடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத வகையில் 152 வகை பயிர்களை நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்றும், பிரதமரின் இலவச உணவு வழங்கும் கரீப் கல்யாண் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கும் திட்டத்தை 5 மாநிலங்களில் அமல்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications