முதல் அறிவிப்பே மேஜர் அறிவிப்பு.. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
டெல்லி: நாடாளுமன்றத்தில் 2024- 25-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கல்வி , திறன் மேம்பாட்டிற்காக 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை செய்ய 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ளது. இதையடுத்து புதிய அரசு இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் மும்முரம் காட்டியது. 2024-25ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்ர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர். அதன்படியே 2024, 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்து வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும்.
பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. இந்த பட்ஜெட் மீது மக்களிடமும் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. குறிப்பாக, வருமான வரிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் விலைவாசி கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதேபோல் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக உள்ளது. எனவே வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளது. அதேபோல் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்றும் எதிர்பார்ப்புகள் உள்ளது. இதேபோல் ரயில் பாதை அமைப்பது, ஏழைகளை மனதில் வைத்து புதிய ரயில்கள் அறிவிப்பது போன்றவற்றை வெளியிட வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு சிறப்பு சலுகைகள் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
இதனிடையே இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி பட்ஜெட் நகலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கொடுத்து ஒப்புதலை பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தயிரும் சீனியும் கலந்த இனிப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து மத்திய பட்ஜெட்டுக்கு மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்பிறகு காலை 11 மணி அளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறும் போது , கல்வி , திறன் மேம்பாட்டிற்காக 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை செய்ய 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். 4.1 கோடி இளைஞர்களுக்காக 5 சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.விவசாயத்துறையில் டிஜிட்டல் முறை புகுத்தப்படும் என்றார்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்த முக்கிய விஷயங்களை பற்றி மேலும் பார்ப்போம்.
80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் பிஎம் கரீப் அன்ன யோஜனா திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
முத்ரா கடன் உதவித் திட்டத்தில் கடன் தொகை ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சிக்கு ₹2.66 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆந்திர மாநில வளர்ச்சிக்காக 15000 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். பீகாரில் விமான நிலையம், மருத்துவக்கல்லூரி, சாலைகள் அமைக்க 26000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ₹1.52 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ₹10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பின் படி, ரூ. 5000 அல்லது ஒரு மாத இன்டர்ன்ஷிப் அலவன்ஸுடன் ரூ. 6000 ஒரு முறை உதவி தொகை வழங்கப்படும்.
புதிதாக பணியில் சேருவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு மாத சம்பளம் வழங்கும். இந்த ஒரு மாத சம்பளம் எப்படி என்றால், இபிஎப்ஓவில் புதிதாக சேர்க்கப்படும் பணியாளர்களுக்கு (ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு) வழங்கப்படும். மொத்தம் 15000 ரூபாய் (அதிகபட்சம்) மூன்று தவணையாக வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications