பெருசா எதிர்பார்க்காதீங்க.. சாமானியர்களுக்கான பட்ஜெட் இது கிடையாது! நிபுணர்கள் கணிப்பு
டெல்லி: கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக பொறுப்பேற்றதிலிருந்து தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு பட்ஜெட்டும் சாமானிய மக்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. ஆனால், இந்த எதிர்பார்ப்புகளை பட்ஜெட் பெரிய அளவுக்கு நிவர்த்தி செய்யவில்லை. அதேபோல, நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டிலும் ஏழைகளுக்கும், சாமானியர்களுக்கும் பெரிய நிவாரணம் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாளை நிர்மலா சீதாராமன் 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் சாமானியர்களுக்கானதாக இருக்காது என்பதற்கு இரண்டு காரணங்களை பொருளாதார நிபுணர்கள் பட்டியல் போடுகின்றனர். ஒன்று, அடுத்த சில ஆண்டுகளில் எந்த பெரிய தேர்தலும் இல்லை. இரண்டாவது, பாஜக தலைமையிலான அரசின் பொருளாதார கொள்கையில் இல்பிலேயே சாமானியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

முதல் விஷயத்தை பொருத்தவரை, கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான வார்த்தைகள் மட்டுமே இருந்தது என்றும், சாமானிய மக்களுக்கு பயன்படும் வகையில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகளும், பொருளாதார நிபுணர்களும் விமர்சித்திருந்தனர். தேர்தலுக்கு முன்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டே இப்படி இருந்தது எனில், இந்த ஆண்டு டெல்லியை தவிர வேறு எந்த பெரிய தேர்தலும் இல்லை. அப்படி இருக்கும்போது மத்திய அரசு என்ன சலுகைகளை வழங்கிவிடும்? என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இரண்டாவது விஷயம் கொஞ்சம் விவரமாக பேச வேண்டியது. அதாவது, பாஜக தாரளமய கொள்கையை அமல்படுத்தும் கட்சி. தாராளமயம் எனில், அரசின் செலவுகளை குறைத்துக்கொள்ளுதல் என்று அர்த்தம்.
ஓய்வூதியம், அரசு வேலைகள், அரசு திட்டங்களுக்கான நிதி, சேவை துறையில் அரசின் பங்களிப்பு ஆகியவற்றிலிருந்து அரசு விலகிக்கொண்டால், அதில் ஏற்படும் செலவுகள் குறைந்துவிடும். இதன் மூலம் நிதி பற்றாக்குறையை 4.5%க்கு கொண்டுவர அரசு முயற்சிக்கிறது. அதென்ன நிதி பற்றாக்குறை என்று கேட்கிறீர்களா? அதாவது இந்திய அரசுக்கு 1 ரூபாய் வருமானம் வருகிறது எனில் செலவும் 1 ரூபாய்க்கு உள்ளேதான் இருக்க வேண்டும். ஆனால் 1.5 ரூபாய் செலவாகிறது. வருமானத்தை விட செலவு அதிகமாக இருப்பதே நிதி பற்றாக்குறை.
கடந்த 2024-2025ம் ஆண்டில் இந்த பற்றாக்குறை 4.9% ஆக இருந்தது. இதனை இந்த நிதியாண்டில் 4.5% ஆக குறைக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. எனவே செலவுகளை குறைக்கிறது. இப்படி செய்வதன் மூலம் நாட்டின் வளரச்சியில் மாற்றம் ஏற்படுமா? என்று கேட்டால் பதில் இல்லை. ஆனால் நிச்சயம் என்னை போல, உங்களை போன்ற சாமானிய மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
உதாரணத்திற்கு, நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி BSNL-க்கு அரசு போதிய நிதியை ஒதுக்காமல் இருக்கிறது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும், வேலைக்கு தேவையான புதிய ஊழியர்களை எடுக்க முடியாமலும் நிறுவனம் திணறுகிறது. நம்மை போன்ற இளைஞர்களுக்கு BSNL போன்ற அரசு துறைகளில் இடஓதுக்கீடு மூலம் வேலை கிடைக்கும். ஆனால் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்கிற ஒன்று கிடையாது.
ஆக மத்திய அரசின் முடிவு, சாமானிய மக்களின் சமூகநீதிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. வேலைவாய்ப்பு துறையில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் காசை மிச்சப்படுத்துகிறோம் என்று அரசு எடுக்கும் முடிவுகள் மக்களை மேலும் நெருக்கடிக்குதான் தள்ளுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை 116.2 கோடி பேர் ஒரு நாளைக்கு ரூ.170-850 வரைதான் சம்பாதிக்கிறார்கள். 116.2 கோடியில் நானும், நீங்களும் இருக்கிறோம்.
சரி இந்த பட்ஜெட்டுக்கு வருவோம். இந்த முறையும் 116.2 கோடி பேரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு பட்ஜெட்டை போடுமா என்றால் கிடையாது என்றே பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகபட்சமாக வருமான வரி உச்சவரம்பில் கொஞ்சம் தளர்வு கொடுக்கப்படலாம். அதுவும் இந்த 116.2 கோடி பேருக்கு பயன்படாது. ஏனெனில் இவர்கள் வருமான வரியை கட்டும் அளவுக்கு சம்பாதிப்பதில்லை. ஆக பட்ஜெட் குறித்த பெரிய எதிர்பார்ப்பு வேண்டியதில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications