தங்கத்தை விடுங்க.. கிரிப்டோவுக்கு மத்திய பட்ஜெட்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்? ஆஹா இதை எதிர்பார்க்கல
டெல்லி: மத்திய பட்ஜெட்டை நாளைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் கிரிப்டோகரன்சியை ஊக்குவிக்கும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளைய தினம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பணவீக்கம் விலைவாசி உயர்வு காரணமாக மிடில் கிளாஸ் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் சூழலில், மத்திய பட்ஜெட்டை மக்கள் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

மத்திய பட்ஜெட்:
இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே பட்ஜெட்டில் இடம்பெறக்கூடிய அறிவிப்புகள் குறித்து தொடர்ச்சியாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி இந்த பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சி சார்ந்த மேஜர் அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் புதிய அதிபரான டிரம்ப் கிரிப்டோவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள சூழலில், உலகெங்கும் கிரிப்டோ துறை ஒழுங்குமுறை கட்டமைப்புக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மத்திய பட்ஜெட்டிலும் எதிரொலிக்கலாம்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு டிஜிட்டல் கரன்சிகளை அணுக வேண்டும் என்றும் சுவோமோ நிறுவனத்தின் நிறுவனர் நிகில் சேத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "கிரிப்டோ சந்தையில் இப்போது தெளிவின்மை இருக்கிறது. இந்த தெளிவின்மையும் அதிகப்படியான வரிகளும் புதுமைகளைத் தடுக்கின்றன. இதனால் கிரிப்டோ ஸ்டார்ட் அப்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
கிரிப்டோ அதிகாரத்தை எப்படிப் பரவலாக்கும் என்பதை ரிசர்வ் வங்கி உணரவில்லை என்றே தோன்றுகிறது. கிரிப்டோவை தடை செய்ய முடியாது.. ஒழுங்குபடுத்த மட்டுமே முடியும். அமெரிக்கா, சிங்கப்பூர், ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகள் கிரிப்டோவில் முற்போக்கான முடிவுகளை எடுக்கும் சூழலில் நாமும் அதைப் பின்பற்ற வேண்டும்.
சரியான வரி விதிப்பு தேவை:
இந்தியாவைப் போன்ற பல திறமைகளைக் கொண்ட நாட்டில் கிரிப்டோவுக்கு சரியான வரி விதிப்பு தேவை. கிரிப்டோ சந்தை ஒரு புதுமையை எதிர்பார்க்கிறது. கிரிப்டோ சந்தையில் இந்தியா முன்னணியில் இருப்பதை உறுதி செய்ய இவை முக்கியமானவை. நிதி அமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் கிரிப்டோ வளர்ச்சியைத் தடுக்காமல் அபாயங்களை மட்டும் குறைக்க வேண்டும். கிரிப்டோ சந்தையில் சரியான அணுகுமுறையைக் கையாண்டால் மட்டுமே தேவையான பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்" என்றார்.
ரொம்ப முக்கியம்:
ஜெப்பே நிறுவனத்தின் ராஜ் கர்கரா என்பவரும் கிட்டதட்ட இதே கருத்தைத் தான் தெரிவித்தார். கிரிப்டோ சந்தையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எளிமையான வரி கட்டமைப்புகள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், "சர்வதேச அளவில் கிரிப்டோ விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பின்பற்றியே இந்தியாவிலும் முடிவெடுக்கப்பட வேண்டும். கிரிப்டோ வருமானத்தின் மீதான 30% வரி, 1% டிடிஎஸ் ஆகியவற்றை நீக்குவார்கள் என நம்புகிறோம். அதேபோல கிரிப்டோ சந்தையை முறையான சொத்தாக அங்கீகரிப்பதும் முக்கியம். இது ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை வரையறுக்க மட்டுமின்றி, இத்துறையின் வளர்ச்சிக்கும் பெரியளவில் உதவும்" என்றார்.
காத்திருக்கும் ஜாக்பாட்?
சோல்வர்ஸின் நிறுவனர் கவிதா கனபர்த்தி இது தொடர்பாக மேலும் கூறுகையில், "கிரிப்டோ சந்தையில் வரி சீர்திருத்தங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் கிரிப்டோ முதலீட்டில் நஷ்டமடையும் போது அதைக் கணக்குக் காட்டி வருமான வரி விலக்கு பெறும் முறையைக் கொண்டு வர வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை கிரிப்டோ துறையை மேம்படுத்தவே உதவும்" என்றார்.
அதாவது நாளை தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் கிரிப்டோ சார்ந்த வரி விதிப்பு முறைகள் மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிகள் குறைத்து, இதில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் முதலீடுகள் அதிகரிக்கும்.. இது இந்திய கிரிப்டோ சந்தை அடுத்த கட்டத்திற்குச் செல்ல உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தாக்கலாகும் பட்ஜெட்டில் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும்பட்சத்தில் அது மத்திய அரசுக்கு கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்டாகவே இருக்கும்.
இது சாதாரண செய்தி மட்டுமே. இதை நிச்சயம் முதலீட்டு ஆலோசனையாகக் கருத வேண்டும். முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் தேவையான ஆலோசனையைப் பெறவும். மேலும், கிரிப்டோ சந்தை என்பது ஒழுங்குபடுத்தப்படாத சந்தை என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்கவும்.












Click it and Unblock the Notifications