இனிமேல் ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியுமா! அடுத்து என்ன நடக்கும்! காங்கிரஸ் பிளான் என்ன
டெல்லி: "மோடி" பெயர் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், அவரால் இப்போது தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்துப் பார்க்கலாம்.
கடந்த 2019ஆம் ஆண்டில் லோக்சபா தேர்தல் சமயத்தில் கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி ஒரு சர்ச்சை கருத்தைத் தெரிவித்திருந்தார். அதுவே இப்போது அவரை துரத்தி வருகிறது.

"மோடி" என்று பெயர் வைத்துள்ள அனைவரும் ஒரே போலத் தான் என்று குறிப்பிட்ட அவர் மேலும், சில சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார். இதை எதிர்த்து குஜராத்தில் உள்ள பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
சூரத் கோர்ட்: இந்த வழக்கை முதலில் விசாரித்த சூரத் கோர்ட் அவர் குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு அதிகபட்ச இரண்டு ஆண்டுகள் சிறை தண்டை விதித்தது. இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்தார். மேலும், இந்தச் சட்டத்தின்படி அவரால் 6 ஆண்டுகள் தேர்தலிலும் போட்டியிட முடியாது. 2 ஆண்டு சிறை + 6 ஆண்டுகள் தடை என மொத்தம் 8 ஆண்டுகள் அவரால் தேர்தலில் போட்டியிடவே முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது நல்லவொரு கருத்து இல்லை என தெரிவித்த உச்ச நீதிமன்றம், பொது வாழ்வில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
அதிகபட்ச தண்டனை: அதேநேரம் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதற்கான எந்த காரணத்தையும் நீதிபதி வழங்கவில்லை என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், இறுதித் தீர்ப்பு வரும் வரை தண்டையை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.
இதன் மூலம் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பியாக தொடர்கிறார். இது குறித்து காங்கிரஸ் தரப்பில் மிக விரைவில் லோக்சபா சபாநாயகருக்கும் கடிதம் எழுதப்படும் என்றே தெரிகிறது. அதன் அடிப்படையில் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்குவது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா முடிவு செய்வார்
போட்டியிட முடியும்: இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அறிவித்தால் ராகுல் காந்தியால் அதில் போட்டியிட முடியும். மேலும், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் ராகுல் காந்தி எம்பியாகவும் தொடர்வார். அதேநேரம் சுப்ரீம் கோர்ட் இப்போது இடைக்கால உத்தரவை மட்டுமே பிறப்பித்துள்ளது. இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் மீண்டும் நிலைமை மாறும்.
அதாவது இறுதித் தீர்ப்பில் ராகுல் காந்தி தண்டையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தால், மீண்டும் அவரது எம்பி பதவி பறிபோகும். அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகும். சுப்ரீம் கோர்ட் தண்டையை ரத்து செய்தால்.. அல்லது குறைத்தால் இதே நிலை தொடரும் என்று கூறப்படுகிறது.
மேலும், இப்போது மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், அதில் பங்கேற்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நகல் கிடைத்தவுடன் இது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றத்திற்குக் கடிதம் எழுதும் எனத் தெரிகிறது. அதன் அடிப்படையில் நாடாளுமன்ற சபாநாயகர் முடிவை எடுப்பார்.












Click it and Unblock the Notifications