சாதி இந்தியாவின் சாபக்கேடு! நேரம் பார்த்து ட்விட்டரில் கொந்தளித்த கார்த்தி சிதம்பரம் -ஏன் தெரியுமா?
டெல்லி: சாதிதான் இந்தியாவின் சாபக்கேடு என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
தனியார் நாளிதழ்களில் வரும் விளம்பர பக்கங்களில் பல்வேறு நிறுவனங்கள், தொழில்கள், அறிவிப்புகளை கடந்து அதில் திருமண வரன்களை தேடி வெளியிடப்படும் விளம்பரங்கள் சுவாரஸ்யம் மிக்கவையாக இருக்கும்.
ஆண், பெண்ணின் எதிர்பார்ப்புகள் தொடங்கி என்ன சாதியில் வரன் வேண்டும் என்பனவற்றையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள். இது அவ்வப்போது விவாதப் பொருளாகவும் மாறும்.

சாதியின் பெயரில் மேட்ரிமோனி தளங்ககள்
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் மேட்ரிமோனி நிறுவனங்களே சாதிகளின் பெயரில் இணையதளங்களை தனித்தனியாக தொடங்கி கல்லா கட்டி வருகின்றன. இருப்பினும் நாளிதழ்களில் வரன்களை தேடும் விளம்பரங்கள் இன்னும் குறையவில்லை. அது தமிழ் நாளிதழ்களாக இருந்தாலும் சரி, ஆங்கில நாளிதழ்களாக இருந்தாலும் சரி.

கார்த்தி சிதம்பரத்தை கோபப்படுத்திய விளம்பரம்
அப்படி ஒரு வரன் தேடும் விளம்பரத்தை பார்த்துதான் கொந்தளித்து இருக்கிறார் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம். ஆங்கில நாளிதழ் ஒன்றில், பீகாரை சேர்ந்த அபிநவ் குமார் என்ற 33 வயது பல் மருத்துவருக்கு பெண் தேடி வெளியான விளம்பரத்தில், "பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெண் தேவை.

அழகான பணக்கார பெண் தேவை
பெண் பார்ப்பதற்கு அழகாகவும் லட்சணமாகவும் நேர்மையாகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் அன்பானவராகவும் அரவணைக்கக்கூடியவராகவும் துணிச்சலானவராகவும் பலமானவராகவும் பணக்காரராகவும் இருக்க வேண்டும்.

தேசபக்தி மிக்க பெண் தேவை
குறிப்பாக இந்தியாவின் மீது தேசபக்தி உடையவராகவும் நாட்டின் இராணுவம் மற்றும் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதில் விருப்பம் உடையவராகவும், அதில் தீவிரமானவராகவும் அதே நேரம் இரக்கமுடையவராகவும் இருக்க வேண்டும். குழந்தை வளர்ப்பில் திறன்மிக்கவராகவும் நன்றாக சமைக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

இந்த சாதியில்தான் பெண் வேண்டும்
அவர் இந்திய இந்து பிராமண சமுதாயத்தை சேர்ந்த பணிக்கு செல்லக்கூடிய பீகார் அல்லது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக ஜாதக ஜோதிட பொருத்தங்கள், 36 குணங்கள் ஒத்துப்போக வேண்டும்." எனக் தெரிவிக்கப்பட்டு கீழே செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வந்த இந்த புகைப்படத்தை கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் பகிர்ந்து, "சாதி இந்தியாவின் சாபக்கேடு" எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

ட்விட்டரில் கார்த்தி சிதம்பரம்
அவரது இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் கார்த்தி சிதம்பரம் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். பல்வேறு விசயங்கள் குறித்து தனது கருத்துக்களை அவர் வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக கூட்டணி கட்சியான திமுக குறித்தும் அதன் திராவிட மாடல் குறித்தும் அண்மையில் கேள்வி எழுப்பினார். அதே போல் நீட் தேர்வு தொடர்பாக இவர் தெரிவித்த கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தின.












Click it and Unblock the Notifications