அடுத்த சிக்கல்.. வேலைக்கு லஞ்சம் பெற்றதாக.. லாலு பிரசாத் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
டெல்லி: லஞ்சமாக நிலத்தை பெற்றுக்கொண்டு ரயில்வே துறையில் பணி வாங்கி கொடுத்ததாக பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
லாலு முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இந்த முறைகேட்டில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
சமீபத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து பீகாரில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்குப் பதிவு
கடந்த 2004-2009 வரை அப்போதைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரயில்வே அமைச்சராக இருந்தவர் லாலு பிரசாத். இவ்வாறு இருக்கையில் லஞ்சமாக நிலத்தை வாங்கிக்கொண்டு ரயில்வே துறையில் குருப் டி பணிகளில் ஆட்களை சேர்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டு மேலெழுந்தது. இதன் அடிப்படையில் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேதி, அவரது மகள்கள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோர் மீது சிபிஐ FIR பதிவு செய்தது.

லஞ்சம்
இதனையடுத்து லாலு மூலம் பணிக்கு சேர்ந்தவர்களாக அறியப்படுபவர்களிடம் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் வெளியாகி இருந்தன. அதாவது பணி பெற்றவர்களுக்கு சொந்தமான நிலங்கள், லாலுவின் குடும்பத்தினருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல பாட்னாவிலும், சுமார் 1.05 லட்சம் சதுரஅடி நிலமும் லாலு குடும்பத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரயில்வே பணி
இவ்வாறு சட்டவிரோதமாக பெறப்பட்டதாக கூறப்படும் நிலங்களின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4.5 கோடி என சொல்லப்படுகிறது. இதனையடுத்து சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி 16 இடங்களில் சோதனையும் மேற்கொண்டது. சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. லாலு அமைச்சராக இருந்தபோது குரூப் டி பணிக்கு விண்ணப்பித்தவர்களை ரயில்வே அதிகாரிகள் நேரில் அழைத்து தற்காலிக பணி ஆணையை வழங்குவார்கள்.

குற்றப்பத்திரிகை
இதனையடுத்து இந்த ஆணையை பெற்றவர்களின் உறவினர்கள் லாலுவின் குடும்பத்தினரின் பெயரில் நிலங்களை எழுதி கொடுத்தால் தற்காலிக பணி நிரந்தரப் பணியாக மாறும். இந்த முறையில்தான் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தற்போது பீகாரில் பாஜகவுக்கு எதிரான அரசியல் தன்மை நிலவி வரும் நிலையில் இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத், அவரின் மனைவி மற்றும் மகள்கள் என 16 பேருக்கு எதிராக சிபிஐ டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதற்கு முன்னர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் பாஜகவுடன் சேர்ந்து பீகாரில் ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது அந்த கூட்டணியை கைவிட்டு லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்து ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications