எல்.முருகன் போட்ட குண்டு! ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திமுகவினருக்கு தொடர்பாம்! சிபிஐ விசாரிக்க கோரிக்கை
டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திமுகவினருக்கும் தொடர்பு உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் உண்மைகள் வெளிவர சிபிஐதான் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 52) கடந்த 5-ந் தேதி சென்னை பெரம்பூரில் கும்பல் ஒன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புடைய 11 பேர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆற்காடு சுரேஷ் என்ற ரவுடியின் படுகொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 11 பேரில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும் ஒருவர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆருத்ரா நிறுவனத்தின் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் ஆம்ஸ்ட்ராங் இருந்ததால் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக் கொல்லும் கும்பலைச் சேர்ந்த ரவுடி திருவேங்கடம் சென்னை அருகே போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திமுகவை தொடர்பு படுத்தி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்தார். அத்துடன் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆருத்ரா மோசடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குமான தொடர்பை மறைக்கத்தான் பாஜக சிபிஐ விசாரணை கோருகிறதா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
இந்த பின்னணியில் டெல்லியில் இன்று ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், திமுக அரசு மற்றும் திமுக காவல்துறையின் தோல்வியைத்தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திமுகவினருக்கும் தொடர்பு உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏதோ ஒன்றை மறைக்க அரசும் போலீசார் தரப்பும் முயற்சிக்கின்றனர். ஆகையால் நாங்கள் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். சிபிஐ விசாரணை செய்தால்தான் உண்மைகளை வெளியே கொண்டு வரவும் முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications