எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குறீங்களா? கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்
டெல்லி: பெட்ரோல், டீசல் விற்கிற விலைக்கு பேசாம எலக்ட்ரிக் வண்டியையே வாங்கிடலாம் என பலர் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால், இதன் விலை எக்கச்சக்கமாக இருப்பதால் பலரும் தயங்கி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலைக்கு சமமாக மின்சார வாகனங்களின் விலையும் சரியும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 1991ம் ஆண்டு முதன் முதலாக தனியார்மயம் அமல்படுத்தப்பட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக சேவை துறையிலும் அமல்படுத்தப்பட்டது. எனவே சேவை துறை லாபத்தை நோக்கி பயணிக்க தொடங்கியது. உதாரணமாக போக்குவரத்தை எடுத்துக்கொள்வோம். தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக அரசு பேருந்துகள்தான் ஓடுகிறது. ஆனால், தனியார் பேருந்துகளின் சேவையின் தரம், மேம்பட்டதாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

என்னதான் தரம் மேம்பட்டாலும், எல்லா இடங்களுக்கும் சேவையை வழங்க தனியார் பேருந்து நிறுவனங்கள் முன்வருவதில்லை. எங்கு லாபம் அதிகமாக கிடைக்கிறதோ அந்த இடத்தில் சேவையை வழங்க முன்வருகின்றன. ஒருபுறம் இப்படி இருக்க மறுபுறம் அரசு போக்குவரத்தின் சேவையில் உள்ள குறைபாடுகள் என அனைத்தும் சேர்ந்து, பொதுமக்களை சொந்த வாகனங்களை நோக்கி தள்ளுகின்றன.
இன்றைய சூழலில் நகரங்களில் வசிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக பைக் இருக்கிறது. கிராமங்களில், ஒவ்வொரு குடும்பத்திலும் பைக் இருக்கிறது. சில வசதிபடைத்த குடும்பங்கள் கார் வைத்திருக்கின்றன. ஆனால், இதை பயன்படுத்துவதில்தான் சிக்கல் இருக்கிறது. அதாவது, பெட்ரோல், டீசல் விலை உயர்வதால், மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் என்னதான் வரலாறு காணாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை அவ்வளவு சீக்கிரம் குறைவதில்லை. யானையை கட்டி தீணியை போட்ட கதையாக பெட்ரோல், டீசல் வாகனங்களை வைத்திருப்பவர்கள் விழித்து வருகிறார்கள்.
எனவே மக்கள் பெட்ரோல், டீசலுக்கு மாற்றான வழிகளை தேடி வருகின்றனர். இந்த கேப்'ஐ பயன்படுத்தி அப்படி வாகன சந்தையில் நுழைந்ததுதான் எலக்ட்ரிக் வாகனங்கள்.
பெட்ரோல் பைக்குகளில், ஒரு லிட்டர் பெட்ரோல் அடித்தால் 40-50 கி.மீ மைலேஜ் தருகின்றன. பெட்ரோல் இன்றைய விலைக்கு ஒரு லிட்டர் ரூ.101 என விற்கப்படுகிறது. ஆனால், எலக்ட்ரிக் பைக்குகள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ வரை பயணிக்க முடியும். ஒருமுறை சார்ஜ்க்கு ரூ.10-20 வரை மட்டுமே செலவாவதாக சொல்லப்படுகிறது. டீசலில் இயங்கும் கார்களுக்கும் இதே நிலைமைதான்.
மின்சார வாகனங்களை பயன்படுத்தும் செலவு குறைவாக இருப்பதால் பலரும் இதை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால்.. இதன் விற்பனை விலை அதிகம். சாதாரண பைக்குகளை விட, மின்சார பைக்குகளின் விலை ரொம்ப கூடுதல். எனவே எலக்ட்ரிக் வாகன விற்பனையில் சில சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் இதை கடந்து இந்த வாகனங்களின் விற்பைனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விற்பனையை மேலும் அதிகரிக்க, இதன் விலை இன்னும் குறையும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநாட்டில் இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர்,
"இந்தியாவில், மின்சார வாகனங்கள் கடந்த ஆண்டு 6.3% சந்தைப் பங்கைக் கொண்டிருக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட 50% அதிகமாகும். பெட்ரோல், டீசல் வாகனங்கள் பணவீக்கம் தொடர்பானவை. எரிபொருள் விலை ஏறினால், அதன் பயன்பாட்டின் விலையும் ஏறும். ஆனால் மின்சார வாகனங்கள் இதிலிருந்து வேறுபட்டவை. கடந்த காலங்களை விட தற்போது இதன் விலை குறைந்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதன் விலை, பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலைக்கு இணையாக இருக்கும்.
2024ல் ஐரோப்பாவிலும், 2026ல் அமெரிக்காவிலும் இதேபோல விலை குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. மின்சார வாகனங்களின் மொத்த விலையில் பேட்டரி மட்டுமே 40%. இந்த பேட்டரிகளின் விலையும் தற்போது குறைந்து வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications