100 மாவட்டங்களில் 100 உணவு தெருக்களை உருவாக்க மத்திய அரசு உத்தரவு.. ஒரு கடைக்கு நிதியுதவி எவ்வளவு?
டெல்லி: நாடு முழுவதும் 100 உணவு தெருக்களை தொடங்க மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி 100 மாவட்டங்களில் இந்த உணவு தெருக்கள் தொடங்கப்படும் என தெரிகிறது.
மத்திய சுகாதார அமைச்சகமும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமும் இணைந்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்தன. அதில் நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருக்க அவர்களுக்கு சுகாதாரமான உணவு பொருட்கள் எளிதாக கிடைக்கச் செய்ய வேண்டும்.

எனவே நாடு முழுவதும் சோதனை முறையில் 100 மாவட்டங்களில் 100 உணவு தெருக்களை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் இதை படிப்படியாக பிற பகுதிகளுக்கும் அதிகரிக்கலாம்.
மகக்ள் மத்தியில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்கவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இதனால் உணவுப்பொருள் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த முடியும். இந்த திட்டத்தின் மூலம் உள்ளூரில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்.
அத்துடன் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியிலும் பங்கு வகிக்கும். தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதற்கு தேவையான தொழில்நுட்ப உதவியை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வழங்கும். இதற்காக நிதியுதவியாக ஒரு உணவு தெருவுக்கு ரூ 1 கோடி வீதம் 100 உணவு தெருக்களுக்கு 100 கோடி ரூபாய் நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும்.
இதை ஒரு சோதனை முயற்சியாக தொடங்கி அதில் நல்ல வரவேற்பு கிடைத்தால் மற்ற இடங்களிலும் இந்த உணவு தெருக்களை தொடங்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த உணவு திருவிழாக்களுக்கு நிதியுதவியானது 60:40 அல்லது 90: 10 என்ற வீதத்தில் வழங்கப்படும்.

இந்தியாவில் நாள்தோறும் தெருவோர உணவு கடைகளில் லட்சக்கணக்கானோர் உணவு உண்டு வருகிறார்கள். இந்த கடைகள் அண்மைக்காலமாக ஆங்காங்கே புற்றீசல் போல் உருவாகி வருகிறது. நகரமயமாக்கல் அதிகரிப்பதாலும் உணவு பழக்கவழக்கங்களில் மாற்றங்களாலும் நடுத்தர மக்களின் பொருளாதார வளர்ச்சியாலும் இந்த கடைகள் அதிகரிக்கின்றன.
இந்த தெருவோர கடைகள் இந்திய சமூகத்தின் ஒரு பகுதியாகும். விரைவு சேவை மற்றும் சவுகரியங்கள் உள்ளிட்டவைகளால் இந்தியாவில் தெருவோரக் கடைகள் அதிகரித்துவிட்டன. தெருவோர உணவுகள் பொருளாதார ரீதியாக குறைந்த விலைக்கு கிடைப்பதும் ஒரு காரணம் ஆகும். தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த தெருவோர கடைகளால் கூடுதல் பலன் உள்ளது. அது போல் இந்தியாவில் தெருவோர உணவு கடைகள் பிரபலமடைய சமூகவலைதளங்களும் ஒரு காரணமாகும்.
Food Bloggers இது போன்ற தெருவோர கடைகளில் உணவு சாப்பிட்டு அதன் தரத்தையும் விலையையும் சமூகவலைதளங்களில் பகிர்கிறார்கள். அதனால் வாடிக்கையாளர்களுக்கு நாவில் எச்சில் ஊறி அந்த கடைகளை தேடி சென்று சாப்பிடுகிறார்கள். பெரும்பாலான தெருவோரக் கடைகள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றன. குடிநீர் முதல் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் வரை அனைத்திலும் சுத்தத்தையே கடைபிடிக்கிறார்கள். இதுவும் தெருவோரக் கடைகள் விஸ்வரூபம் எடுக்க ஒரு காரணமாகும்.












Click it and Unblock the Notifications