"ரூ. 600 கோடி.." ஹாட் ஸ்டார், அமேசானுக்கு சவால் விடும் புதிய ஓடிடி.. மத்திய அரசின் அதிரடி திட்டம்
மத்திய அரசு பிரசார் பாரதிக்கு தனியாக ஓடிடி தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
டெல்லி: ஓடிடி தளங்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு புதிய அதிரடி முடிவை எடுத்துள்ளது.. அதாவது தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவற்றுக்கு தனியாக ஓடிடி தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நவீன உலகில் எல்லாமே இணைய வசம் சென்று கொண்டிருக்கிறது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்திற்கும் இப்போது தனித்தனியாகச் செயலிகள் வந்துவிட்டது.
சில துறைகளை இந்த ஆன்லைன் செயலிகள் அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டன. உணவு டெலிவரி, டேட்டிங் உள்ளிட்டவற்றில் டெக் செயலிகள் நமது செயல்பாடுகளையே மாற்றிவிட்டன.

டிவிக்கள்
மற்றொரு துறையையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். டிவி பார்க்கும் முறையே இப்போது முற்றிலுமாக மாறி வருகிறது. 1990களில் தான் இந்தியாவில் டிவி மெல்ல வர ஆரம்பித்தது. ஒரு காலத்தில் வீடுகளில் ஆடம்பர பொருட்களாக இருந்த டிவிக்கள் மெல்ல அத்தியாவசிய பொருட்களாக மாற ஆரம்பித்தன. டிவிக்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகின. குறிப்பாகத் தமிழ்நாட்டில் மாநில அரசே கூட டிவிக்களை இலவசமாகக் கொடுத்தன.

மாறி வரும் பழக்கம்
கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காலகட்டங்களில் டிவிக்கள் மூலம் பாடங்களும் கூட நடத்தப்பட்டன. அந்தளவுக்கு அவை முக்கியமானதாக இருந்தன. அதேநேரம் ஓடிடி வருகைக்குப் பின்னர், நாம் வீடியோக்களை எப்படிப் பார்க்கிறோம் என்ற முறை முற்றிலுமாக மாறிப்போனது. முன்பு பெரும்பாலான வீடுகளில் கேபிள் கனெக்ஷன் மூலமே டிவி இருந்தது. இப்போது அந்த துறையே காணாமல் போகும் சூழலில் உள்ளது.

ஓடிடி
ஏனென்றால் ஓடிடி முறையில் வீடியோக்களை பார்க்கும் முறை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மொபைல் போன் மூலம் ஓடிடி வீடியோக்களையே பார்ப்பதையே மக்கள் விரும்புகின்றனர். நகரங்களில் பெரும்பாலான வீடுகளில், டிவிகளில் கூட ஓடிடி மூலமே வீடியோக்ளை பார்க்கிறார்கள். நாம் விரும்பிய நேரத்தில் பார்க்கலாம்.. விளம்பரங்கள் தொல்லைகள் இருக்காது என்பதால் ஓடிடி பக்கமே மக்கள் திரும்புகிறார்கள்..

முக்கிய நிறுவனங்கள்
எப்போது வேண்டுமானாலும் பாஸ் செய்தும், ரீவைண்ட் செய்தும் கூட பார்க்கலாம் என்பதால் ஓடிடி மீதே மக்கள் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதனால் பல நிறுவனங்களும் ஓடிடி மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளன. ஓடிடி-க்கு எனத் தனியாக வீடியோக்களை தயாரிக்கும் நடவடிக்கைகளிலும் கூட அவர்கள் இறங்கிவிட்டனர். இப்போது இந்தியாவில் அமேசான், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட தளங்கள் டாப் இடத்தில் உள்ளன.

மத்திய அரசு திட்டம்
இதற்கிடையே பிரசார் பாரதிக்கு தனியாக ஒரு ஓடிடி தளத்தைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றுக்கு தனியாக ஓடிடி உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் இந்த ஓடிடி தளம் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக 600 கோடி ரூபாயை ஒதுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி பார்வையாளர்களை அதிகரித்து வருவாயை அதிகரிக்க முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

2,500 கோடி ஒதுக்கீடு
இது குறித்து மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் கூறுகையில், "டிவி பார்ப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. அதை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.. அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் உள்ளிட்ட பிரசார் பாரதியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வானொலி நிலையங்களை ஏலம் விடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆண்டு இரண்டாம் மற்றும், மூன்றாம் கட்ட நகரங்களுக்கு ரேடியோக்களை எடுத்துச் செல்வதே எங்கள் நோக்கம்" என்றார்.












Click it and Unblock the Notifications