தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகம்.. ஒரே ஆண்டில் 8 ஆயிரம் பேர் உயிரிழப்பு.. நிதின் கட்கரி பகீர்
டெல்லி : மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் அதிக அளவில் சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது எனவும், 2020ஆம் ஆண்டில் தமிழகத்தில் 45,484 சாலை விபத்துகள் நடந்துள்ள நிலையில் சுமார் 8000 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் இந்தியாவில் நடைபெற்று வரும் சாலை விபத்துகள் குறித்தும் உயிரிழப்புகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தேசிய அளவில் சாலை விபத்துகளும் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சாலை விபத்து எண்ணிக்கை
இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்து மூலம் பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த 2018ஆம் ஆண்டு சுமார் 4 லட்சத்து 62 ஆயிரத்து 44 விபத்துகள் நடைபெற்ற நிலையில் 2020 ஆம் ஆண்டு விபத்துக்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 138 ஆக குறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் 2018-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் சுமார் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 417 பேர் உயிரிழந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 714 பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் முதலிடம்
மேலும் 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை நெடுஞ்சாலை பகுதிகளில் நடைபெற்ற விபத்துகள் குறித்து மாநில வாரியாக பட்டியலை வெளியிட்ட மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் அதிக அளவில் சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது தெரியவந்ததாகவும் 2020ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 45 ஆயிரத்து 484 விபத்துகள் நடைபெற்றுள்ளதாகக் கூறினார்.

அதிக உயிரிழப்பு
இந்த விபத்துக்களில் 8,059 பேர் உயிரிழந்ததாகவும், 50,551 பேர் வரை காயம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். நாட்டில் குறைவாக புதுச்சேரி மாநிலத்தில் 969 விபத்துக்களில் 145 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்து 19 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்த கட்கரி, கடந்த காலங்களை ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்றார். மத்திய அரசு சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்த நிதின் கட்கரி, சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிவதற்கான சுற்றறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது என்றார்.

கருப்பு விபத்து பகுதிகள்
இந்த அறிவிப்பின் படி தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறியுமாறும், கடந்த 3 ஆண்டுகளாக 5 சாலை விபத்துக்கள் அல்லது பத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு இடங்களில் 500 மீட்டர் நீளத்திற்கு கருப்பு இடமாக குறிப்பிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் நிரந்தரத் தீர்வு காணவும் நீண்டகால நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படும் எனவும் மாநிலங்களில் பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications