நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு - மத்திய அரசு
டெல்லி: நாட்டில் பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் போன்ற உள்நாட்டு போராளி குழுக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மாநிலங்களில் மத்திய ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் அமலில் உள்ளது.
ஜம்மு-காஷ்மீர், அசாம், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த சட்டம் அமலில் உள்ள நிலையில் இதன் மூலம் வன்முறையில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும், தேவைபட்டால் தற்காப்புக்காக சுட்டுக் கொல்லவும் போலீசார், துணை ராணுவத்துக்கு அதிகாரம் உண்டு.

இந்த மாத தொடக்கத்தில் நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என்று நினைத்து சுரங்கத் தொழிலாளர்கள் பயணம் செய்த வாகனம் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படி ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் எதிர்ப்பு குரல் எழுந்து வந்தது.
இந்த நிலையில் நாகாலாந்தில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது எதிர்ப்பை கூட்டியுள்ளது. ''நாகாலாந்து மாநிலம் முழுவதையும் உள்ளடக்கிய பகுதி மிகவும் குழப்பமான மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது, சிவில் சக்தியின் உதவிக்கு ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவது அவசியம்'' என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது. கடைசியாக ஜூன் 30-ம் தேதி நாகாலாந்தில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications