பயமுறுத்தும் ஓமிக்ரான்.. சர்வதேச விமான சேவை தொடங்கும் முடிவு ஒத்திவைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: உலகம் முழுவதையும் கொரோனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த புதிய வகை உருமாறிய கொரோனா ஓமிக்ரான் என்று அழைக்கப்படுகிறது. இந்த உருமாறிய வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் டெல்டா வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

மத்திய அரசு உத்தரவு
ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விடக்கூடாது என்பதில் இந்தியாவும் மிகவும் அலர்ட்டாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிடம் இருந்து வருபவர்களை விமான நிலையங்களில் தீவிரமாக பரிசோதிக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் ஆர்.டி.பி.சி ஆர் சோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு விமான சேவை
ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளுக்கு வழக்கமான விமானங்கள் இயக்கப்படாத நிலையில் விமானங்களை இயக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து டிசம்பர் 15-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சர்வதேச விமான பயணிகள் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளது.

ஒத்திவைப்பு
இந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸ் அச்சம் காரணமாக டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு தொடங்க இருந்த விமான சேவையை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் (DGCA) வெளியிட்ட அறிக்கையில், ' ஓமிக்ரான் வைரஸ் மாறுபாட்டால் கவலையில் இருக்கும் உலகளாவிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை செய்து சர்வதேச விமான போக்குவரத்து சேவை தொடங்க இருந்த தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விமான சேவை தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.
Recommended Video

நரேந்திர மோடி உத்தரவு
சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது விமான சேவை தொடங்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications