மத்திய அரசில் 9.79 லட்சம் காலி பணியிடம்! 18 மாதம்தான், பிறகு பாருங்க எல்லாமே நிரப்பப்படும்- அமைச்சர்
டெல்லி:மத்திய அரசில் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்த பணியிடங்கள் 18 மாதங்களில் முழுமையாக நிரப்பப்பட உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் பணவீக்கம் அதிகரிப்புக்கு மத்தியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தி கொடுக்கவில்லை. மத்திய அரசின் லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்பப்படாமல் உள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு தருவதாக பாஜக தேர்தல் வேளையில் கூறிய நிலையில் தற்போது மத்திய அரசின் செயல்பாட்டால் இளைஞர்கள் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர் என எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடரும் விமர்சனம்
இதற்கிடையே தான் பாதுகாப்பு துறையில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படை, விமானப்படைகளில் பணிக்கு சேருவோரில் 75 சதவீதம் பேர் 4 ஆண்டுகளில் திருப்பி அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு ஓய்வூதியமும் இருக்காது. இத்தகைய அம்சம் கொண்ட திட்டத்தையும் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து திட்டத்தை கைவிட கோரி டெல்லி உள்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் போராட்டம்
இருப்பினும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தற்போது அக்னிபாத் திட்டத்தில் முப்படைகளுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கை துவங்கி உள்ளது. இதற்கிடையே தான் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி
இந்நிலையில் தான் நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு தொடர்பாக பாஜகவின் சுஷில் குமார் மோடி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் ஒன்றை அளித்துள்ளார்.

1472 ஐஏஎஸ் பணி காலி
ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 1,472 ஐஏஎஸ் பணியிடங்களும், 864 ஐபிஎஸ் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதில் நேரடியாக பணியமர்த்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் உகந்த சேர்க்கையை உறுதி செய்வதற்காக பஸ்வான் கமிட்டி பரிந்துரைப்படி சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் ஆண்டுக்கு 180 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இது கடந்த 2012ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகளை பொறுத்தமட்டில் கடந்த 2020ம் ஆண்டு முதல் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் நேரடி சேர்க்கை நியமன எண்ணிக்கை 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மொத்தம் 9.79 லட்சம் பணி
மேலும் 2021 மார்ச் 1ம் தேதி அடிப்படையில் பார்த்தால் மொத்தம் 9.79 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 2.93 லட்சம் பணிகள் ரயில்வே துறையிலும், 2.64 லட்சம் பணிகள் பாதுகாப்பு துறையிலும், 1.43 லட்சம் பணிகள் உள்துறையிலும், 90,050 பணிகள் தபால் துறையிலும் காலியாக உள்ளன. அதோடு இவற்றில் 23,584 பணிகள் குரூப் ஏ பிரிவிலும், 26,282 பணிகள் குரூப் பி(Gazetted) பிரிவிலும், 92,525 பணிகள் குரூப் பி (Non Gazetted) பிரிவிலும், 8.36 லட்சம் பணிகள் குரூப் சி (Non Gazetted) பிரிவிலும் உள்ளன.

18 மாதங்களில் பணி நிரப்புதல்
இந்த பணியிடங்கள் நிரப்புவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது துறை வாரியாக உள்ள காலிபணியிடங்கள் பற்றி விதாதம் நடைபெற்றது. மேலும் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி இன்னும் 18 மாதங்களில் சுமார் 10 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications