புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்- முதல் அமர்விலேயே பொது சிவில் சட்ட மசோதா?
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் விரைவில் புதிய கட்டிடத்தில் தொடங்க உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் அமர்விலேயே சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாட்டின் ஜனாதிபதியை அழைக்காமல் பிரதமர் மோடியே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் கூண்டோடு புறக்கணித்தன.

இப்புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. ஜூலை இறுதி வாரம் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி ஆகஸ்ட் 10-ந் தேதி வரை கூட்டம் நடைபெறலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி இருந்தார். அரசியல் சாசனத்தின் படியே பொது சிவில் சட்டம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியிருந்தார். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், மணிப்பூர் வன்முறையை திசை திருப்புகிற பிரதமர் மோடியின் செயல்பாடு இது என கடுமையாக விமர்சித்தன.
ஆம் ஆத்மி ஆதரவு: இன்னொரு பொது சிவில் சட்டம் தொடர்பாகவும் விவாதங்கள் எழுந்துள்ளன. பொது சிவில் சட்டத்தை மிகவும் உக்கிரமாக எதிர்ப்போம் என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நிற்கும் ஆம் ஆத்மி கூட, பொது சிவில் சட்டத்தை தொடக்க நிலையில் ஆதரிக்கிறோம் என கூறியிருக்கிறது.
திமுக கடும் எதிர்ப்பு: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகளுமே பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், நான் கேட்கிற கேள்வி எல்லாம், மணிப்பூர் மாநிலம் - இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி. ஆளுகிற மாநிலம். அந்த மணிப்பூர் மாநிலம் கடந்த 50 நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது. 150 பேர் இதுவரை பலியாகியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இதுவரை பிரதமர் அந்தப் பக்கமே போகவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைகூட 50 நாட்களுக்குப் பிறகுதான் அமித் ஷா அவர்கள் நடத்தி இருக்கிறார். இதுதான் ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க ஆட்சியின் லட்சணம். இந்த லட்சணத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று சொல்லி இருக்கிறார். எனவே ஒரு நாட்டினுடைய சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்க வேண்டும். மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார் நம்முடைய மோடி அவர்கள். எனவே மதப் பிரச்சனையை அதிகம் ஆக்கி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர் கருதிக் கொண்டிருக்கிறார். நான் உறுதியோடு சொல்கிறேன், நிச்சயமாக உறுதியாக வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடத்தை மக்கள் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். தயாராகி விட்டார்கள் என கடுமையாக விமர்சித்திருந்தார்.
தற்போதைய நிலையில் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதனை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து பொது சிவில் சட்ட மசோதாவை எதிர்ப்பது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆலோசனை நடத்தி போராட்டத்தை அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications