ஆக்சிஜன் பற்றாகுறையால் இறப்பு இல்லை என்று நாங்கள் சொல்லணும்.. அதானே? மத்திய அரசுக்கு சிசோடியா கேள்வி
டெல்லி: "ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்புகளை விசாரிக்க" ஒரு குழுவை அமைக்கும் டெல்லி அரசின் திட்டத்தை லெப்டினன்ட் கவர்னர் (எல்ஜி) அனில் பைஜால் மீண்டும் நிராகரித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "இரண்டாவது கொரோனா அலையின் போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டெல்லி ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது, மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்புகளை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று ஒரு கோப்பை நாங்கள் மீண்டும் துணை நிலை ஆளுநரிடம் சமர்ப்பித்தோம். ஆனால் அது தேவையில்லை என்று அவர் கூறிவிட்டார்" என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா குற்றம்சாட்டியுள்ளார்.

ஒருபுறம், மத்திய அரசு மாநிலங்கள், தங்கள் மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் குறித்த தகவலை தெரிவிக்க கோரியது. ஆனால் அதை விசாரிக்க அனுமதிக்கவும் மறுக்கிறது. பிறகு மாநிலங்கள் எப்படி உண்மையை சொல்ல முடியும். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த மரணமும் ஏற்படவில்லை என்று நாங்கள் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அது ஒரு பெரிய பொய்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆக்ஸிஜன் மேலாண்மை தோல்வியடைய மத்திய அரசே பொறுப்பு. அது வேண்டுமென்றே செய்ததா அல்லது நிர்வாக திறமையின்மையால் நடந்ததா என்பது விசாரணைக்குரியது. ஆக்ஸிஜன் நெருக்கடிக்கு மத்திய அரசு தான் காரணம் என்பதை அவர்கள் ஏற்க வேண்டும்.
கடந்த வாரம், நான் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதில், இரண்டாவது கோவிட் அலையின் போது ஆக்ஸிஜன் தொடர்பான இறப்புகள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆய்வு செய்யாமல் கண்டறிவது கடினம், எனவே குழுவை அமைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். அந்த ஒப்புதலை துணை நிலை ஆளுநர் அளிக்கவில்லை.
கொரோனா இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட இறப்புகளை ஆய்வு செய்ய டெல்லி அரசு ஜூன் மாதம் நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால், இந்த குழுவை, துணை நிலை ஆளுநர் ஏற்கவில்லை. இந்த நிலையில் மறுபடியும், டெல்லி அரசின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications