"டார்க்கெட் ராகுல்".. ரெய்டுக்கு ரெடியான அமலாக்கத்துறை? ED-யிடம் இருந்தே ராகுலுக்கு போன தகவல்
டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது தனது சக்கரவியூக பேச்சு பிடிக்காததால் அமலாக்கத்துறை சோதனை நடத்த முடிவு செய்துள்ளது. இதுபற்றி அமலாக்கத்துறையில் இருப்பவர்களே தகவல் சொல்லி உள்ளதாக ராகுல் காந்தி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல் காந்தி... நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இதற்கு முன்பு எம்பிக்கள் பதவியேற்பு விழாவின்போது நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும், தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரிலும் ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

லோக்சபாவில் ராகுல் காந்தி நேரடியாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தாக்கி பேசி வருகிறார். அதுமட்டுமின்றி தொழிலதிபர்கள் அம்பானி, அதானி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோரின் பெயரை கூறி விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் தன்னை அமலாக்கத்துறை குறி வைத்துள்ளது. தனக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக ராகுல் காந்தி பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:
‛‛வெளிப்படையாகவே எனது சக்கர வியூக பேச்சு 2 பேரில் ஒருவருக்கு பிடிக்கவில்லை. இதனால் என் மீது சோதனைகள் நடத்தப்பட உள்ளதாக அமலாக்கத்துறையில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறையின் ரெய்டுக்கு இருகரங்கள் கூப்பியும், சாயா (டீ) மற்றும் பிஸ்கட்டுடனும் நான் காத்திருக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. நேஷனல் ஹெரால்ட் தொடர்பான பணமோசடி வழக்கில் ராகுல் காந்தியிடம் கடந்த 2022 ஆண்டு அமலாக்கத்துறை 5 நாட்கள் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்ற ஜாமீனில் உள்ளார். இத்தகைய சூழலில் தான் அமலாக்கத்துறை ரெய்டு மேற்கொண்டால் இந்த வழக்கை அடிப்படையாக வைத்து திட்டமிடுவதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும் அமலாக்கத்துறை தன்மீது ரெய்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக ராகுல் காந்தி கூறியிருக்கும் நிலையில் மத்திய அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்ற லோக்சபாவில் காங்கிரஸ் சார்பில் இன்று ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் சக்கர வியூக பேச்சை குறிப்பிட்டு உள்ளார். இதன் பின்னணி என்னவென்று பார்த்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி பட்ஜெட் மீதான பதிலுரையின்போது பேசினார். அப்போது அவர் மகாபாரத கதையுடன், தற்போதைய பாஜக அரசை ஒப்பிட்டு விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:
‛‛பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அபிமன்யு 6 பேரின் சக்கரவியூகத்தால் கொல்லப்பட்டார். சக்கரவியூகத்தின் மற்றொரு பெயர் பத்ம வியூகம். இது தாமரை மலரின் வடிவத்தில் உள்ளது. அதற்குள் பயமும், வன்முறையும் இருக்கிறது. அபிமன்யுவிற்கு என்ன நடந்ததோ அதுபோல, 21ம் நூற்றாண்டில் மற்றொரு சக்ரவியூகம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. அபிமன்யுவை சக்கரவியூகத்தில் 6 பேர் கொன்றனர்.
இன்றும் சக்கரவியூகத்தின் 6 பேர் உள்ளனர். நரேந்திர மோடி சக்கரவியூகத்தை தாங்கி உள்ளனர். அபிமன்யு இடத்தில் நம் நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் இருக்கின்றனர். அன்று சக்கர வியூகத்தை 6 பேர் வகுத்தது போல் இன்று அந்த இடத்தில் நரேந்திர மோடி, அமித்ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அதானி மற்றும் அம்பானி ஆகியோர் உள்ளனர் '' எனக்கூறினார். ராகுலின் இந்த பேச்சுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அதானி, அம்பானியை ஏ1, ஏ2 என்று கூறி ராகுல் காந்தி பேசியது சர்ச்சையானது.












Click it and Unblock the Notifications