நேரம் தவறாத விமான சேவை.. உலகளவில் சென்னை விமான நிலையத்துக்கு 8-வது இடம்!
டெல்லி: கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பல மாதங்கள் பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முடங்கியது. பயணிகள் விமான சேவைக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேருந்து போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது. பயணிகள் ரயில் சேவையும் கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. ஆனால் விமான போக்குவரத்தை பொறுத்தவரை இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை சீரடைந்தாலும், வெளிநாடுகளுக்கு விமான சேவை சீராகவில்லை.

சிறப்பு விமானங்கள்
கொரோனா தொடக்க காலத்தில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க 'வந்தே பாரத்' என்னும் திட்டத்தின் மூலம் இந்தியா சிறப்பு விமானங்களை இயக்கியது. இதன்பிறகு பல்வேறு நாடுகளுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியா வெளிநாடுகளுக்கு வழக்கமான பயணிகள் விமான சேவையை இன்னும் தொடங்கவில்லை.

ஜப்பான் விமான நிலையம் முதலிடம்
தற்போது ஓமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த ஆண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்கள் குறித்து சிரியம் என்ற நிறுவனம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்த பட்டியலில் 96.51 சதவீதத்துடன் ஜப்பானின் இட்டாமி விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது.

சென்னை விமான நிலையம் 8-வது இடம்
இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு விமான நிலையம்தான் இடம் பெற்றுள்ளது. அது நம்ம சென்னை விமான நிலையம்தான். இந்த பட்டியலில் சென்னை சர்வதேச விமான நிலையம் 8-வது இடத்தில் உள்ளது. சென்னை விமான நிலையத்தில் 98.32 சதவீதம் சரியான நேரத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டதாக சிரியம் நிறுவனம் கூறியுள்ளது.

அடிக்கடி கண்ணாடி உடைந்து விழும்
சென்னை விமான நிலையம் பட்டியலில் 8-வது இடம் பிடித்தது கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது தொடர்கதையாக இருந்தது. இது ஒரு தடவை; இரண்டு தடவை அல்ல; கிட்டத்தட்ட 80-க்கும் மேற்பட்ட முறை சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தன. இந்த சம்பவங்கள் அடிக்கடி செய்திகள் வலம் வந்தது. சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி நடை போட்ட மாநாடு திரைப்படத்தில் கூட சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழும் காட்சி ஒன்று இடம் பிடித்து இருந்தது குறிபிடத்தக்கது.












Click it and Unblock the Notifications