சென்னை டூ பெங்களூர் அரை மணி நேரத்தில்.. அடித்து நொறுக்க போகும் ஹைப்பர்லூப்.! இது மாபெரும் சாதனை
டெல்லி: நமது நாட்டில் ஒரு பக்கம் வந்தே பாரத் ரயில்கள் கலக்கி வரும் நிலையில், மற்றொரு புறம் புல்லட் ரயில் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக இப்போது ஹைப்பர்லூப் திட்டம் குறித்த ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன. ரயில்களில் இதுவரை நாம் பார்க்காத வேகத்தைச் சாத்தியப்படுத்தும் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் புதிய சாதனையைப் படைக்கப் போகிறது.
இந்தியாவில் ரயில்கள் தான் அடிப்படை போக்குவரத்து முறை என்பது அனைவருக்கும் தெரியும். நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து இருப்பதால் மக்கள் பெரும்பாலும் ரயில்களில் பயணிக்கவே விரும்புகிறார்கள்.

ஏற்கனவே நமது நாட்டில் வந்தே பாரத் தொழில்நுட்பம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக புல்லட் ரயில் கட்டுமானமும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த இரண்டும் ஒரு பக்கம் இருக்க இப்போது சென்னை ஐஐடி அசுர பாய்ச்சலை நிகழ்த்த ரெடியாகிறது. அதுதான் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்.
ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்
இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்திற்கான சோதனையைச் சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. முதற்கட்ட சோதனைக்காக சுமார் 422 மீட்டரில் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை கட்டப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் உதவியுடன் இந்த சோதனை டிராக் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இது நமது நாட்டின் அதிவேக போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.
ஹைப்பர்லூப் அமைப்பு மூலம் குறைந்த அழுத்தக் குழாய்கள் மூலம் 1,000 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இதில் டெல்லி டூ ஜெய்ப்பூர் வரையிலான 300 கிமீ தூரத்தை 30 நிமிடங்களில் அடைய முடியுமாம். அதாவது தமிழ்நாட்டில் சென்னை டூ திருச்சி வரையிலான தூரத்தை இதே 30 நிமிடங்களில் அடைந்து விட முடியும். இது இந்தியாவின் பொது போக்குவரத்தை நிச்சயம் மொத்தமாகப் புரட்டிப் போட்டுவிடும். இது குறித்த ஆய்வுகளே இப்போது தீவிரமாக நடந்து வருகிறது.
யாரெல்லாம் உதவி
இதற்கு லார்சன் & டூப்ரோ (எல்&டி), ஆர்சிலர் மிட்டல் மற்றும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் என பல்வேறு நிறுவனங்களும் உதவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட சோதனை போட்டோக்களையும் வீடியோக்களையும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
வெறும் அரை மணி நேரம்
ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் போது அது இந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும், முக்கிய நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து மேம்படும். அதாவது மணிக்கு 1000 கிமீ என்றால் சென்னையில் இருந்து பெங்களூரைக் கூட அரை மணி நேரத்தில் அடையலாம். இதுபோல நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து மேம்படும்போது அது பல புதிய பொருளாதார வாய்ப்புகளை ஓபன் செய்யும்.
சென்னை ஐஐடி
சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகத்தில் இந்த சோதனை தடம் அமைந்துள்ளது. இந்திய ரயில்வே, சென்னை ஐஐடியின் அவிஷ்கர் ஹைப்பர்லூப் குழு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனமான TuTr இணைந்து இந்த ஹைப்பர்லூப் ரயில்களின் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இவை வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் அது ரயில் போக்குவரத்தில் இந்தியாவுக்கான பெரும் பாய்ச்சலாக இருக்கும்.
சென்னை ஐஐடியில் ரயில்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக் விமானங்களின் சோதனையும் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை ஐஐடியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று எலக்ட்ரிக் விமானங்களின் இறுதிக்கட்ட சோதனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications