விநாயகர் சதுர்த்திக்கு பிரதமர் மோடி வந்தது ஏன் ? ஓபனாக பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான டி ஒய் சந்திரசூட், கடந்த மாதம் 7 ஆம் தேதி தனது இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜையை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டது, பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இந்த விமர்சனங்களுக்கு தலைமை நீதிபதி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியின் போது, டெல்லியில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் வீட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, விநாயகர் பூஜையில் பங்கேற்று ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார்.

நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியலில் இருந்து விலகி நிற்க வேண்டும். சிவசேனா தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் முன்னிலையில் நிலுவையில் இருக்கிறது. பிரதமர் மோடியுடனான சந்திப்பால் எங்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்பது சந்தேகமாக இருக்கிறது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூறியது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் விமர்சித்து இருந்தன. வழக்கறிஞர்கள் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து இருந்தன.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கூறுகையில், " இதுபோன்ற சந்திப்புகள் ஏன் நடக்கிறது என மக்கள் நினைக்கிறார்கள். நீதிபதிகளின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கமான ஒரு விஷயம்தான். இது போன்ற சந்திப்புகளில் நீதித்துறை தொடர்பான கருத்துக்கள் ஒருபொதும் பகிரப்படாது. ஜனநாயக ஆட்சி அமைப்பில் அவரவர் கடமைகள் அவர்களுக்கு நன்றாக தெரியும். அரசியலமைப்பின் முதிர்ச்சியை காட்டுகிறது
நீதித்துறைக்கான பட்ஜெட் மாநில அரசிடம்தான் உள்ளது. அது நீதிபதிகளிடம் இல்லை. மாவட்டங்களில் நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதிகளுக்கான இல்லங்கள் தேவைப்படும் போது, தலைமை நீதிபதிகள், முதல்வர்களை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.நான் இதற்கு முன்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது, முதல்வர் இல்லத்திற்கு சென்றேன். அதன்பிறகு அப்போதைய முதல்வர் என் வீட்டிற்கு வருகை தந்தார். மாநிலத்தில் நீதித்துறைக்கான 10 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கடிதங்கள் வாயிலாக பரிமாற்றம் நடந்து இருந்தால் அந்த திட்டங்கள் ஒருபோதும் நிறைவு பெற்று இருக்காது. இதுபோன்ற சந்திப்புகளின் போது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து முதல்வர் ஒருபோதும் கேட்க மாட்டார். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நிகழ்ச்சிகளின் போது முதல்வரும், தலைமை நீதிபதியும் சந்தித்து கொள்கிறார்கள். இத்தகைய சந்திப்புகளால் நீதித்துறை பணிகளில் எந்த பாதிப்பும் இருக்காது" என்றார்.












Click it and Unblock the Notifications