ஜி 20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு! இந்தியா வரும் சீன அமைச்சர்.. ஆப்சென்ட் ஆகும் ஜப்பான் அமைச்சர்?
ஜி 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நாளை டெல்லியில் நடக்கிறது.
டெல்லி: நாளை தொடங்கும் ஜி20 வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில் சீனாவின் வெளியுறவு அமைச்சர் கின் கேங் கலந்து கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் கூறியதாகத் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், அமைச்சரின் இந்த வருகை முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
உலகில் மிகப் பெரிய டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு தான் ஜி 20. இந்த ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிற்கு வழங்கப்படும்.
கடந்தாண்டு இந்தோனேஷியா ஜி20 தலைமை பொறுப்பில் இருந்த நிலையில், இந்தாண்டு இந்தியாவிடம் தலைமை பொறுப்பு வந்துள்ளது. ஜி20 தலைமை ஏற்கும் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறும்.

ஜப்பான்
அதன்படி இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் சர்வதேச நாடுகளின் அதிபர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறும். அதற்கு முன்பு, பல்வேறு மாநாடுகள் நடைபெறும். அதன்படி வரும் மார்ச் 2ஆம் தேதி ஜி20 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெறுகிறது. ஜப்பானில் இப்போது நாடாளுமன்றம் நடைபெறும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி இதில் கலந்து கொள்ள மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக இணை அமைச்சர் ஒருவர் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

சீன அமைச்சர்
இதற்கிடையே டெல்லியில் நடைபெறும் ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் இந்தக் கூட்டத்தில் சீனாவின் வெளியுறவு அமைச்சர் கின் கேங் கலந்து கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் கூறியதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாகச் சீன அரசின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், "உலகப் பொருளாதாரத்தின் முக்கிய சவால்களில் ஜி-20 கவனம் செலுத்த வேண்டும். இதற்கு ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் முக்கிய சமிக்ஞையை அனுப்புவதை உறுதி செய்ய அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளோம்" என்றார்.

வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நாளை தொடங்குகிறது. "ஒரு பூமி.. ஒரு குடும்பம்.. ஒரு எதிர்காலம்" என்ற தலைப்பில் இந்த ஜி20 மாநாடு நடைபெறுகிறது. ஜி20 உச்சி மாநாடு வரும் செப். 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பு நடக்கும் முக்கியமான கூட்டங்களில் ஒன்றாக இந்த வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் கருதப்படுகிறது. டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்த உச்சி மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சீனா மோதல்
கடந்த 2020 ஜூன் மாதம் லடாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இரு தரப்பும் எல்லையில் ராணுவத்தைக் குவித்துள்ளது. எல்லையில் சுமுகமான உறவு திரும்பும் வரை இரு நாட்டு உறவு நார்மலாக இருக்காது என்பதில் இந்திய வெளியுறவுத் துறை தெளிவாக உள்ளது. இரு தரப்பிற்கும் இடையே ராணுவ ரீதியிலும் தூதரக ரீதியிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. நிலைமை மெல்லச் சீராகி வந்த நிலையில், மீண்டும் கடந்த டிச. மாதம் சீன படைகள் இந்தியப் பகுதியில் நுழைந்தது.

ஏன் முக்கியம்
அப்போதும் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சீன படைகள் அத்துமீறி நுழைய முயல்வதாகவும் இந்தியா அதற்குப் பதிலடி கொடுத்ததாகவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பிப். 22ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தைத் தணிக்க முடிவு செய்யப்பட்டது. இந்தச் சூழலில் சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வருவது இரு நாட்டு உறவை சுமுகப்படுத்த மேலும் உதவும் என்று கருதப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் சீன டாப் அமைச்சர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications