சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம்.. காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்துக்கு சிக்கல்.. கோர்ட் அதிரடி
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை நடத்திய வேதாந்தா குழுமம் சார்பில் பஞ்சாப்பில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிக்காக 2011-ல் சீன நாட்டவருக்கு விசாக்கள் வழங்க லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரம் உள்பட 6 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது மூத்த தலைவர் ப சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்திய வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான தலவண்டி சபோ பவர் லிமிடெட் நிறுவனம் சார்பில் பஞ்சாப் மாநிலம் மானசாவில் புதிதாக அனல்மின் நிலையம் அமைககும் பணி நடந்து வந்தது.

இந்த பணி குறித்த காலத்துக்குள் முடிவடையவில்லை. இதனால் கூடுதல் காலம் அனல்மின் நிலையத்தில் பணிபுரிய 260 சீன நாட்டவருக்கு விசா வழங்கப்பட்டது. இது சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் வரை லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
குறிப்பாக சிவகங்கை காங்கிரஸ் எம்பியும், ப சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்தின் பெயரும் அடிபட்டது. சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. லஞ்ச புகாரில் கார்த்தி சிதம்பரத்தில் ஆடிட்டர் பாஸ்கர் ராமன், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். 2-வது குற்றவாளியாக கார்த்தி சிதம்பரம் சேர்க்கப்பட்டார். மேலும் பலரது பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டது.
இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ ஏற்கனவே சோதனை நடத்தியது. இதுதொடர்பான வழக்கு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கார்த்தி சிதம்பரம் உள்பட 7 பேரின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தது. இதில் சேத்தன் ஸ்ரீவஸ்தவா என்பவர் விடுவிக்கப்பட்டார்.
இதனால் கார்த்தி சிதம்பரம் உள்பட 6 பேருக்கு எதிரான வழக்கை இன்று சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி டிக் வினய் சிங் விசாரித்தார். அப்போது கார்த்தி சிதம்பர் உள்பட 6 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும்படி நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இது கார்த்தி சிதம்பரத்துக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் 2022ம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன்பிறகு 2 ஆண்டு விசாரணைக்கு பிறகு 2024ல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் கார்த்தி சிதம்பரம் உள்பட பலரது பெயர்கள் சேர்க்கப்பட்டு இருந்தது. வழக்கு தொடர்பாக முழு விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:
‛வேதாந்தாவின் துணை நிறுவனம் தலவாண்டி சபோ பவர் லிமிடெட் நிறுவனம் சார்பில் பஞ்சாப்பில் 1980 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது. இதற்கான பணி சீன நிறுவனமான ஷாண்டாங் எலக்ட்ரிக் பவர் கண்ட்ஸ்ரக்ஷன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு அவுட்சோர்ஸிங் முறையில் வழங்கப்பட்டது. ஆனால் திட்டமிட்ட காலத்துக்குள் பணி நிறைவு பெறவில்லை. இதனால் சீன நிறுவனத்தின் 263 பேருக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கார்த்தி சிதம்பரத்தை அவருக்கு நெருக்கமான பாஸ்கர ராமன் வழியாக அணுகினர்.
இந்த விசாக்கள், அனைத்தும் மின்சாரம் மற்றும் ஸ்டீல் துறைக்காக பிரத்யேகமாக 2010ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சிறப்பு விசாவாகும். இதற்கான லஞ்சப்பணம் மும்பையை சேர்ந்த பெல் டூல்ஸ் என்ற நிறுவனம் வழியாக கைமாற்றப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்துக்கு நெருக்கமான பாஸ்கர ராமன் வேதாந்தாவின் துணை நிறுவனமான தலவண்டி சபோ பவர் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து மும்பையை சேர்ந்த பெல் டூல்ஸ் நிறுவனம் வழியாக லஞ்சம் வாங்கி உள்ளார்.
அதன்பிறகு கடந்த 2011 ஜூலை மாதம் நிறுவனம் சார்பில் விசா கோரி உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் வழங்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த வழக்கில் தற்போது கார்த்தி சிதம்பரம் உள்பட 6 பேர் குற்றசசாட்டுகளை பதிவு செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அது அவர்களுக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications