ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் உள்ளது.. பிரதமர் மோடி
டெல்லி: ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். தனது இல்லத்தில் பாதிரியார்கள் உள்பட கிறிஸ்தவ சமூகத்தினரை சந்தித்து பேசிய பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவ பெருமக்கள் ஈடுபட்டனர். நள்ளிரவில் தேவாலயங்கள் திறக்கப்பட்டு சிறப்பு ஜெபக் கூட்டங்களும் நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவ சமய பெரியோர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி கூறியதாவது:- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த புனித நாளில் எங்கள் வீட்டிற்கு நீங்கள் வருகை தந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தையும் அவரது போதனைகளையும் கொண்டாடும் நாள் இது. அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இயேசு கிறிஸ்து பாடுபட்டார். ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் உள்ளது. கிறிஸ்தவர்கள் சமூக நீதியின் பக்கம் நிற்பவர்கள்.
பல பள்ளிகளை கட்டிக் கொடுத்துள்ளனர். நாட்டிற்கு கிறிஸ்தவர்கள் அளித்த பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக போப் பிரான்சிஸ்சை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிகவும் மறக்க முடியாத தருணம் அதுவாகும். புனித பைபிளில் உண்மைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.












Click it and Unblock the Notifications