விரைவில் அதிகரிக்கும் சிகரெட் விலை! 75 சதவிகிதம் கூட இருக்குமாம்.. அது சரி அதென்ன "பாவ வரி"கள்?
டெல்லி: இந்தியாவில் இப்போது சிகரெட் பொருட்கள் மீது 53% வரி விதிக்கப்படுகிறது. இருப்பினும் சிகரெட் மீதான செஸ் வரி சில மாதங்களில் காலாவதி ஆகும் நிலையில், கூடுதல் வரிகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சிகரெட் உள்ளிட்ட பொருட்களின் விலை மேலும் உயரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் அதிகம் புகையிலை பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. புகையிலையால் கேன்சர் உருவாகும் அபாயம் உள்ள நிலையில், அதன் பயன்பாட்டைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பிரபல ஆங்கில ஊடகமான எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கூடுதல் வரி
தற்போது, சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது தவிர செஸ் உள்ளிட்ட பல கூடுதல் வரிகளும் விதிக்கப்படுகிறது. ஆக மொத்தம் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு 53% வரி விதிக்கப்படுகிறது.. பல கூடுதல் வரிகள் விதிக்கப்படுவதால் விலை அதிகமாக இருக்கிறது. இதனால் சீனாவில் இருந்து சட்டவிரோதமாக சிகரெட்கள் கொண்டு வரப்படுவதாகப் புகார்கள் உள்ளன.
மேலும், சிகரெட் மீதான இழப்பீடு செஸ் வரி 2026 மார்ச் மாதம் நிறைவடைகிறது. இதனால் புகையிலை பொருட்களில் இருந்து கிடைக்கும் வருவாய் குறையலாம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் வருவாய் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. புதிதாக மீண்டும் செஸ் வரியை விதிக்க மத்திய அரசு விரும்பவில்லை. அதற்குப் பதில் புதிதாக 40% ஜிஎஸ்டி ஸ்லாப்பை அறிமுகம் செய்யவும் அத்துடன் கூடுதலாக ஒரே ஒரு கலால் வரி மட்டும் விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
பாவ வரிகள்
இது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலின் கீழ் உள்ள அமைச்சர்கள் குழு ஆலோசித்து வருகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் தனது இறுதி முடிவு எடுப்பதற்கு முன், தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புகையிலை பொருட்களால் உடலுக்குத் தீங்கு ஏற்படும். இதனால் புகையிலை பொருட்களை எப்போதும் பாவப் பொருட்கள் என்றே குறிப்பிடுவார்கள். இதன் மீதான வரிகள் பாவ வரிகள், அதாவது sin tax என்று அழைப்பார்கள்.
75% வரை இருக்கலாம்
இதனால் இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் புகையிலை பொருட்களின் நுகர்வைத் தடுக்க வரி விதிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் சிகரெட் மீதான வரி விதிப்பு 53%ஆக இருக்கிறது. இது அதிகம் தான் என்றாலும் கூட உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த 75%ஐ விட இந்தியாவின் வரி குறைவாகும். எனவே, மத்திய அரசு கூடுதல் வரிகளை விதிக்கலாம். இதன் மூலம் சிகரெட் விலை மேலும் உயரும் என்றே கூறப்படுகிறது.
இந்தியாவில் புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் மூலம் கடந்த 2022-23ஆம் ஆண்டில் மட்டும் 72,788 கோடி ரூபாய் வருவாயாகக் கிடைத்துள்ளது. ஒருவேளை மத்திய அரசு புகையிலை பொருட்கள் மீதான வரியை அதிகரித்தால் வருவாயும் அதிகரிக்கும்.
திட்டம் என்ன
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "இப்போது நாங்கள் இரண்டு திட்டங்களை ஆலோசித்து வருகிறோம். ஜிஎஸ்டியை 40% ஆக உயர்த்துவதும், வரி வருவாயைத் தக்கவைக்கக் கலால் வரியை அத்துடன் சேர்ப்பது ஒரு வழி.. இன்னொன்று செஸ்க்கு பதிலாகச் சுகாதார செஸ் போடுவது. இது தொடர்பாக விரிவான ஆலோசனைக்குப் பிறகு தேவையான முடிவை எடுப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications