'மணிப்பூர் சர்ச்சை உத்தரவு'- நீதிபதி முரளிதரனின் சென்னை டிரான்ஸ்பர் கோரிக்கையை நிராகரித்த கொலிஜியம்!
டெல்லி: மணிப்பூர் வன்முறைகளுக்கு அடிப்படையாக இருப்பதாக விமர்சிக்கப்படும் உயர்நீதிமன்ற உத்தரவை பிறப்பித்த மணிப்பூர் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முரளிதரன் தம்மை சென்னைக்கு இடம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் கொலிஜியம் நிராகரித்தது.
மணிப்பூரில் மைத்தேயி மக்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் இறுதியில் அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க முயற்சித்தது.

மணிப்பூர் வன்முறையும் நெருக்கடியும்: இதற்கு குக்கி இனமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மணிப்பூர் மாநிலம் 6 மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பல நூறு பேர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தும் அகதிகளாகவும் முகாம்களில் தங்கி உள்ளனர். இன்னமும் மணிப்பூர் வன்முறை ஓயவில்லை. இந்த விவகாரம் மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என்பதற்காக அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் கொண்டு வரும் அளவுக்கு நிலைமை சீரியசானது.
நீதிபதி முரளிதரன் மாற்றம்: இந்நிலையில் மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடம் மாற்றம் செய்தது உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம். கொலிஜியம்/ கொலீஜியம் என்பது நீதிபதிகள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு. இந்த குழு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் மத்திய அரசு நீதிபதிகள் நியமனம்/ இடமாற்றம் குறித்து முடிவெடுக்கும் / ஒப்புதல் வழங்கும்/ நிராகரிக்கும்.
நீதிபதி முரளிதரன் கோரிக்கை நிராகரிப்பு: இதனிடையே நீதிபதி முரளிதரன், தம்மை சென்னை உயர்நீதிமன்றத்துக்கோ அல்லது மணிப்பூரிலோ தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என கொலிஜியத்திடம் கோரியிருந்தார். ஆனால் கொலிஜியம் இந்த கோரிக்கையை நிராகரித்தது. நீதிபதி முரளிதரனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி மத்திய அரசுக்கு கொலிஜியம் மீண்டும் பரிந்துரை வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் முறையீடு: மேலும் மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக முரளிதரனுக்கு பதில் சித்தார்த் மிருதுல் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் 3 மாதங்களாகியும் இப்பரிந்துரை நடைமுறைக்கு வராதது தொடர்பாக ஒரு மனு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொலிஜியம் பரிந்துரையை செயல்படுத்தாது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு தரப்பில் உரிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications