"மறுபடியும் முதல்ல இருந்தா".. விமான நிலையங்களில் தொடங்கியது கொரோனா பரிசோதனை.. மத்திய அரசு உத்தரவு
டெல்லி: சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதை அடுத்து, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மன்சுக் மாண்டவியா, இந்த தகவலை தெரிவித்தார்.
இந்த நடைமுறை தற்போது வெளிநாட்டுப் பயணிகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் உள்நாட்டு பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'அலர்ட் மோடு'க்கு மாறிய இந்தியா
சீனாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. நாள்தோறும் 5,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சுமார் 3,000 பேர் உயிரிழந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சீனாவில் ஒருவித அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, சீனாவில் பரவி வரும் புதிய ஒமிக்ரான் வகை வைரஸ்கள் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் உச்சக்கட்ட அலர்ட் ஆகியுள்ள இந்தியா, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

மோடி அவசர ஆலோசனை
இதனிடையே, இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை என்னென்ன நடவடிக்கைளை எடுக்கப் போகிறது? ஒருவேளை, கொரோனா பரவல் அதிகரித்தால் அதை சமாளிக்க மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்கின்றனவா? விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன? என்பன உள்ளிட்ட விஷயங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதிரடி அறிவுறுத்தல்கள்
இதனிடையே, கொரோனா பரவலை ஆரம்பக்கட்டத்திலேயே தடுக்க, பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை இந்திய மருத்துவ சங்கம் வழங்கியுள்ளது. அதன்படி, பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்; அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்; வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா பரிசோதனை தொடக்கம்
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "சீனாவில் தான் கொரோனா பரவல் கவலைக்கிடமாக உள்ளது. இந்தியாவில் ஓராண்டாக நிலவி வருவது போன்ற இயல்பு நிலையே காணப்படுகிறது. எந்தவொரு இடத்திலும் திடீரென கொரோனா தொற்று அதிகரித்துவிடவில்லை. இருந்தபோதிலும், சீனாவில் காணப்படும் ஒமிக்ரான் வகை வைரஸ்கள் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றின் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications