நள்ளிரவிலும் பரபரத்த டெல்லி: சத்தீஸ்கர், ம.பி. வேட்பாளர்கள் தேர்வில் பாஜக, காங். பிஸி!
டெல்லி: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக டெல்லியில் நேற்று நள்ளிரவைத் தாண்டியும் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்கள் அடுத்த மாதம் இறுதியில் அல்லது டிசம்பரில் நடைபெற உள்ளது.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த 5 மாநில தேர்தல் மிகவும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் 5 மாநில தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் படுதீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் நேற்று சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. சத்தீஸ்கர் தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்று இரவும் இந்த ஆலோசனை நடைபெறும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
இதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டமும் நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது.
5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது என்கின்றன தேர்தல் கருத்து கணிப்புகள். அதேநேரத்தில் ராஜஸ்தானில் பாஜகவுக்கு சாதகமான நிலைமை உள்ளது எனவும் கருத்து கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. இந்த தேர்தல் மிகவும் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் வேட்பாளர்கள் தேர்வில் மிக தீவிரமான ஆலோசனைகளை பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications