'புதுசா கட்டி அதுக்கு புது பெயர் வச்சிக்கோங்க'.. முகல் கார்டன் பெயர் மாற்றம்.. காங்கிரஸ் கடும் கண்டனம்
சாலைகள்/ஊர்கள்/ரயில் நிலையங்கள் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் 'பைசாபாத்' மாவட்டத்தின் பெயர் 'அயோத்தியா' என மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகல் கார்டன் (முகலாய தோட்டம்) 'அம்ரித் உத்யான்' என பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த காலங்களில் சாலைகள், நினைவு கட்டிடங்கள், சின்னங்கள் போன்றவற்றிற்கு மத்திய அரசு புதிய பெயர்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையின் முகல் கார்டனின் (முகலாய தோட்டம்) பெயரை மாற்றியுள்ளது. 1929ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த தோட்டமானது ஆங்கிலேய மற்றும் முகலாய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று(ஜன.28) குடியரசுத் தலைவரின் இணை செய்தித் தொடர்பாளர் நவிகா குப்தா வெளியிட்டிருந்த அறிக்கையில் இந்த தோட்டத்தின் பெயர் மாற்றப்பட்டிருந்ததை கூறியிருந்தார். இந்த அறிக்கையில், "நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சுதந்திரத்தின் 'அமிர்தகால கொண்டாட்டத்தின்' ஒரு பகுதியாக முகலாயர் தோட்டத்தின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த தோட்டத்திற்கு 'அம்ரித் உத்யான்' என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெயர் சூட்டியுள்ளார். இந்த தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கும்.

பார்வைக்காக
பொதுமக்கள் தவிர மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு என்று பிரத்தேயகமாக சில நாட்கள் ஒதுக்கப்படும். வரும் 31ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதிவரை இந்த தோட்டம் பார்வைக்காக திறந்திருக்கும்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்த பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் முன்னாள் எம்பியும் நிர்வாகியுமான ரஷீத் ஆல்வி கூறுகையில், "ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது பாஜக கொண்டிருக்கும் மோசமான வெறுப்பின் வெளிபாடுதான் இந்த பெயர் மாற்றம். இப்படி ஏற்கெனவே உள்ள சாலைகளுக்கும், தோட்டங்களுக்கும் பெயரை மாற்றுவதற்கு பதிலாக புதியதாக இவற்றை உருவாக்கி உங்களுக்கு பிடித்த பெயர்களை வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

எதிர்ப்பு
மேலும், "நகரங்கள், சாலைகளில் தொடங்கி தற்போது தோட்டங்களுக்கு புதிய பெயர்களை இடுவதை அவர்கள் வளர்ச்சியாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்" என்றும் விமர்சித்துள்ளார். ஆனால் மறுபுறம் இந்த பெயர் மாற்றத்தை பாஜகவினர் வரவேற்கின்றனர். இது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை என்றும் கூறியுள்ளனர். இது குறித்து மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், "முகலாயர்கள் எத்தனையோ இந்துக்களையும் கோயில்களையும் அழித்தார்கள். எனவே இவர்களின் பெயரிடப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு மறுபெயரிட வேண்டும்.

ஆதரவு
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் அனைத்து ஆங்கிலேயர் மற்றும் முகலாயர்களின் பெயர்களை அகற்றுவோம்" என்றும் கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள இந்த தோட்டமானது காஷ்மீரில் உள்ள முகலாயர் தோட்டம், தாஜ்மஹால் தோட்டம் மற்றும் பெர்ஷியாவின் மினியேச்சர் ஓவியங்களின்பால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், சாலைகள், நினைவுச் சின்னங்களின் பெயர்கள் மாற்றப்படுவது இது முதல் முறையல்ல. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில் அங்குள்ள 'பைசாபாத்' மாவட்டத்தின் பெயரே 'அயோத்தியா' என மாற்றப்பட்டது.

முதல்முறையல்ல
அதேபோல அம்மாவட்டத்தின் ரயில் நிலையத்தின் பெயரை 'பைசாபாத் ரயில் நிலையம்' என்பதிலிருந்து 'அயோத்தியா கண்டோன்மென்ட்' என்று மாற்றம் செய்யப்பட்டது. மத்தியப் பிரதேசத்திலும் ஆளும் பாஜக அரசு 'ஹபிப்கஞ்ச்' ரயில் நிலையத்தின் பெயரை 'ராணி கமலாபதி' ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications