இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்? கோதாவில் இறங்கிய டிகே சிவக்குமார்.. பாஜகவுக்கு செக்?
சிம்லா: இமாசல பிரதேசத்தில் ராஜ்யசபா தேர்தலில் 6 எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களித்த நிலையில், மாநில காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று பாஜக கூறி வருகிறது. காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கூட பாஜக கொண்டு வருவது பற்றி ஆலோசிப்பதாக சொல்லப்படும் நிலையில், டிகே சிவக்குமாருக்கு முக்கிய பொறுப்பை காங்கிரஸ் மேலிடம் கொடுத்துள்ளது.
நாடாளுமன்ற ராஜ்யசபாவில் உறுப்பினர்களாக இருந்த 56 பேரின் பதவி காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. ராஜ்யசபாவில் காலியாகும் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ஏனைய 15 இடங்களுக்கு போட்டி இருந்ததால் கர்நாடகா, உத்தர பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்றது. இதில், கர்நாடக மாநிலத்தில் 4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிட்டதால் தேர்தல் நடைபெற்றது. பாஜக -ஜனதா தளம் (எஸ்) கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்டது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 பேரும், பாஜக வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர். பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் தோல்வியடைந்தார். இதேபோல் இமாசல பிரதேசத்தில் காலியாகும் ஒரு உறுப்பினர் பதவிக்கு ஆளும் கட்சியான காங்கிரஸ் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வியும், பாஜக சார்பில் ஹர்ஸ் மகாஜனும் போட்டியிட்டனர்.
மொத்தம் 68 எம் எல் ஏக்கள் உள்ள அந்த மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்களும்,, பாஜகவுக்கு 25 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்ட நிலையில் இருவரும் தலா 34 ஓட்டுகளை பெற்றனர். முடிவில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹர்ஸ் மகாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இதில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 சுயேட்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு வாக்களித்ததாக சொல்லப்படுகிறது. இப்படி மாற்றி வாக்களித்தாக சொல்லப்படும் எம்எல்ஏக்களை சிஆர்பிஎஃப் வீரர்களும், ஹரியானா போலீசாரும் சேர்ந்து கடத்தி சென்றுவிட்டதாக இம்மாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றம்சாட்டியுள்ளார். கட்சி மாறி வாக்களித்ததன் மூலம் தங்கள் எம்எல்ஏக்களை விலை பேசியுள்ளதாகவும், இப்படியாக மாநிலத்தில் ஆட்சி கவிழ்ப்பை நடத்த பாஜக முயல்வதாகவும் முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு மத்தியில் இமாசால பிரதேச அரசுக்கு பெரும்பான்மை இழந்துவிட்டதாக பாஜக கூறி வருகிறது. காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது. இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வரை மாற்ற காங்கிரஸ் மேலிடம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய பரபரப்பான சூழலில், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் இமாசல பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். டிகே சிவக்குமார் ஏற்கனவே பல முறை பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தவராக பார்க்கப்படுவதால், காங்கிரஸ் தலைமை அவரை நியமித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஷிம்லாவிற்கு டிகே சிவக்குமார் விரைந்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை சந்த்தித்து ஆலோசனை நடத்துவார் எனத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications