"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக இருந்த 24, அக்பர் சாலை அலுவலகத்தை காலி செய்யச் சொல்லியே நோட்டீஸ் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக இருக்கும் அக்பர் சாலை அலுவலகத்திற்கு இந்த நோட்டீஸ் வந்துள்ளது அக்கட்சி தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தேசியளவில் இருக்கும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு இப்போது நோட்டீஸ் வந்துள்ளது. டெல்லியில் காங்கிரஸின் தலைமை அலுவலகமா இருந்த இடத்தை காலி செய்ய வேண்டும் எனச் சொல்லி அக்கட்சிக்கு நோட்டீஸ் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாகப் பயன்படுத்தி வரும் தனது 24, அக்பர் சாலை அலுவலகத்தை காலி செய்யச் சொல்லியே நோட்டீஸ் வந்துள்ளது.

நோட்டீஸ்
1978ஆம் ஆண்டு முதல் காங்கிரஸின் அடையாளமாக இந்த அலுவலகமே இருந்து வருகிறது. இந்த அலுவலகத்தைத் தான் மார்ச் 28க்குள் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகக் கட்சியினர் தெரிவித்தனர். அதேபோல இந்திய இளைஞர் காங்கிரஸ் அலுவலகமான 5, ராய்சினா சாலை அலுவலகத்திற்கும் இதுபோன்ற நோட்டீஸ் வந்துள்ளது.
காரணம்
இது அலுவலகம் ஆக்கிரமிப்பு கட்டிடம் எல்லாம் இல்லை. முறைப்படி காங்கிரஸ் பெயரிலேயே இருக்கிறது. அதற்கான வாடகையையும் காங்கிரஸ் செலுத்தியே வருகிறது. பிறகு ஏன் நோட்டீஸ் வந்துள்ளது என்ற கேள்வி பலருக்கும் வரும். அதாவது இந்த அக்பர் சாலை அலுவலகம் லூட்டியன்ஸ் பங்களா மண்டலத்தில் அமைந்துள்ளது. அந்த மண்டலத்தில் இருக்கும் விதிகள் காரணமாகவே காங்கிரஸுக்கு இந்த சிக்கல் உருவாகியுள்ளது.
அதாவது காங்கிரஸ் கடந்த 2025 ஜனவரியில் புதிய கட்சித் தலைமை அலுவலகமான இந்திரா பவனை (9A, கோட்லா மார்க்) திறந்தது. அரசு விதிகளின்படி, லூட்டியன்ஸ் பங்களா மண்டலத்தில் அரசியல் கட்சிகள் ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. இந்த விதி காரணமாகவே காங்கிரஸுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கொந்தளிப்பு
அதேநேரம் காங்கிரஸ் தலைவர்கள் இதனால் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த நடவடிக்கையைச் சட்டவிரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் சொல்லியுள்ளனர். இந்த விவகாரத்தில் சட்ட உரிமைகள் அனைத்தையும் பயன்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்பாகக் காங்கிரஸ் எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், "இது சட்டவிரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த நோட்டீஸ்களுக்கு எதிராக அனைத்து சட்டப்பூர்வ வழிகளும் மேற்கொள்ளப்படும்" என்றார்.
காங்கிரஸ் கட்சி தனது புதிய தலைமை அலுவலகமான உள்ள இந்திரா பவனுக்கு செயல்பாடுகளை மாற்றியிருந்தாலும், அக்பர் சாலை என்பது காங்கிரஸின் அடையாளமாகவே இருக்கிறது. இதனால் அரசியல் முக்கியத்துவம் காரணமாகத் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வரலாறு
அக்பர் சாலை அலுவலகம் வரலாற்றின் சுவடுகளைத் தாங்கி நிற்கின்றன. பிரிட்டிஷ் ஆட்சியின்போது வைசிராய் லின்லித்கோவின் நிர்வாகக் குழு உறுப்பினரான சர் ரெஜினோல்ட் மேக்ஸ்வெல் ஒரு காலத்தில் இங்கு தான் வசித்தார். 1960களின் முற்பகுதியில், இது இந்தியாவின் மியான்மர் தூதரான டாவ் கின் கியியின் இல்லமாக இருந்தது. பிற்காலத்தில் நோபல் அமைதிப் பரிசை வென்ற அவரது மகள் ஆங் சான் சூகி, பல ஆண்டுகள் இங்கு வாழ்ந்தார்.
பங்களாவின் புகழ்பெற்ற அத்தியாயம் 1970களின் பிற்பகுதியில் தொடங்கியது. 1977 தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் பிளவுபட்டது. புதிய குழுவை வழிநடத்திய இந்திரா காந்திக்கு அலுவலகம் தேவைப்பட்ட நிலையில், இந்திரா விசுவாசியான ராஜ்யசபா எம்.பி. ஜி. வெங்கடசாமி தனது பங்களாவை வழங்கினார். காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு இந்த பங்களா சாட்சியாக விளங்கியது. ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்ம ராவ், டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோரின் பிரதமர் காலத்திலும் இதுவே தலைமையகமாகச் செயல்பட்டது.












Click it and Unblock the Notifications