வயநாடு, ரேபரேலி.. ராகுல் காந்தியின் தோ்தல் செலவு இவ்வளவா?.. காங்கிரஸ் தகவல்

2024 லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகின. இதில், காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது காங்கிரஸ் கட்சி. இதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சி எடுத்த இந்த முடிவு பாஜகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தப் பதவி மத்திய அமைச்சருக்கு இணையான பதவி. ராகுல் காந்தி இனி பல தேர்வு கமிட்டிகளில் இருப்பார். தேர்தல் ஆணையர் தேர்வு முதல் மனித உரிமை கமிட்டி தலைவர் தேர்வு வரை அனைத்துக்கும் ராகுல் காந்தியின் ஒப்புதல் தேவை என்ற நிலை இதன் மூலம் உருவாகியது. இது பாஜகவுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம், வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டு, வெற்றி வாகை சூடினார். இதைத்தொடர்ந்து, விதிமுறைகளின்படி எதாவது ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் ராஜினாமா செய்ய வேண்டியதிருந்தது. இதையடுத்து, ராகுல் ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொண்டார்.
வயநாடு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். மேலும், வயநாடு இடைத்தேர்தலில் ராகுலின் சகோதரியும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராகுல் காந்திக்கு வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் செலவுகளுக்காக தலா ரூ. 70 லட்சம் என இரு தொகுதிகளுக்கும் சேர்த்து ரூ. 1.40 கோடி காங்கிரஸ் தலைமை கட்சி நிதியிலிருந்து வழங்கியது தெரியவந்துள்ளது.
மக்களவைத் தோ்தல் மற்றும் ஆந்திரா, ஒடிஸா உள்ளிட்ட 4 மாநிலப் பேரவைத் தோ்தல்களில் செய்யப்பட்ட செலவுகள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் சமா்ப்பித்துள்ளதன் மூலம் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதேபோல, கிஷோரி லால் சா்மா, கேரளத்தின் ஆழப்புழாவில் போட்டியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழ்நாட்டின் விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் ஆகியோருக்கும் தலா ரூ. 70 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இமாச்சலப் பிரதேசம், மண்டி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் விக்ரமாதித்ய சிங்குக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ. 87 லட்சம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் மூத்த தலைவா்களான ஆனந்த் சா்மா, திக்விஜய் சிங் ஆகிய இருவரும் ரூ. 46 லட்சம், ரூ. 50 லட்சம் பெற்றுள்ளனா்.
தேர்தல் பிரசார செலவில் வேட்பாளருக்கு செலவு செய்வதற்கான உச்சவரம்பு உள்ளது. ஆனால், அரசியல் கட்சிகளுக்கு அதுபோன்ற வரம்புகள் எதுவும் இல்லை. மத்திய அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு வேட்பாளா்களுக்கான செலவு வரம்பை லோக்சபா தோ்தலுக்கு ரூ. 70 லட்சத்தில் இருந்து ரூ. 95 லட்சமாகவும், சட்டப் பேரைவத் தோ்தலுக்கு ரூ. 28 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாகவும் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications