வெள்ளை டீசர்ட்டில் யார் அது? அதிகாலையிலேயே டெல்லி மார்க்கெட்டுக்கு போன ராகுல் காந்தி! பரபர பின்னணி
டெல்லி: ராகுல் காந்தி இன்று அதிகாலையிலேயே திடீரென்று டெல்லியில் உள்ள ஆசாத்பூர் மார்க்கெட்டுக்கு சென்று மக்களோடு மக்களாக வலம் வந்தது மக்கள் மற்றும் வியாபாரிகளை ஆச்சரியப்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ, போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி. மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது. இதனால் அவர் வயநாடு தொகுதியின் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தான் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி கேட்டறிந்து வருகிறார். கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து அவர் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கி ஜம்மு காஷ்மீர் வரை நடந்து சென்றார்.
‛இந்தியாவுக்கான ஒற்றுமை பயணம்' என்ற பெயரில் நடந்த இந்த நடைப்பயணத்தில் ராகுல் காந்தி பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் அவர் லாரியில் பயணம் செய்து டிரைவர், கிளீனர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி அறிந்து கொண்டார்.
அதன்பிறகு ஹரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் விவசாயிகளை திடீரென ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அவர்களின் குறைகளை கேட்ட ராகுல் காந்தி அவர்களுடன் சேர்ந்து நெல் நடவு செய்தார். மேலும் பெண் விவசாயிகளை அவர் தனது தாய் சோனியா காந்தியின் இல்லத்துக்கு அழைத்து விருந்து வழங்கி அசத்தினார். அதோடு உரம், விதைகளின் விலை உயர்வு, ஜிஎஸ்டியால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி கேட்டறிந்தார்.
இதன் தொடர்ச்சியாக தான் ராகுல் காந்தி இன்று அதிகாலையில் டெல்லியில் உள்ள ஆசாத்பூர் மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு அவர் மக்களோடு மக்களாக சாதாரணமாக நின்றார். இதை பார்த்த வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து ஆர்வமாக அவரிடம் பேசினர். ராகுல் காந்தியும் கனிவுடன் பேசியதோடு காய்கறி, பழங்களின் விலைகள் பற்றி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

சமீபகாலமாக இந்தியாவில் தக்காளி விலை என்பது விண்ணை தொட்டுள்ளது. பல இடங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200யை கடந்து விற்பனையானது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தக்காளி விலை தற்போதும் உயர்ந்து ரூ.200யை தொட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தக்காளி விலை உயர்வு, அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி அறியும் நோக்கத்தில் ராகுல் காந்தி ஆசாத்பூர் மார்க்கெட்டுக்கு சென்றார். இந்த வேளையில் தக்காளி விலை உயர்வு தங்களை வெகுவாக பாதித்துள்ளது என்றும், சமையலில் தக்காளி பயன்பாட்டை குறைத்து கொண்டதாகவும் பொதுமக்கள் அவரிடம் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஆசாத்பூர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரி ராமேஷ்வர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுததோடு, ‛‛தக்காளி விலை அதிகமாக உள்ளது. அதை வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை. மீறி வாங்கினாலும் அந்த தக்காளியை எந்த விலைக்கு விற்பனை செய்வதில் குழப்பம் உள்ளது. அதோடு நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் உள்ளது'' என தெரிவித்து இருந்தார். இதையடுத்து தான் ராகுல் காந்தி இன்று அதிகாலையிலேயே ஆசாத்பூர் மார்க்கெட்டுக்கு சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications