ஆம் ஆத்மி மிரட்டலுக்கு பணிகிறது காங்கிரஸ்? நாடாளுமன்றத்தில் டெல்லி சேவைகள் மசோதாவை எதிர்க்க முடிவு?
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச அரசில் அதிகாரிகள் நியமனம், மாற்றம் தொடர்பான மத்திய பாஜக அரசின் மசோதாவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்பதை அக்கட்சி மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் இடையே அதிகாரிகள் நியமனம், மாற்றங்களில் மோதல் இருந்து வந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கும் நடைபெற்றது. இவ்வழக்கில் மாநில அரசுகளுக்குதான் அதிகாரிகள் நியமனம் ,மாற்றத்தில் அதிகாரம் இருப்பதாகவும் ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அமைச்சரவை முடிவுகளுக்கு கட்டுப்பட்டுவர்தான் எனவும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

ஆனால் மத்திய அரசோ, இந்த தீர்ப்பை செல்லாதது ஆக்கும் வகையில், டெல்லியில் அதிகாரிகள் நியமனம், மாற்றங்களில் மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால் இந்த அவசர ச்டடம் அமலில் இருக்கிறது. மத்திய அரசின் இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது.
மத்திய அரசின் இம்மசோதா லோக்சபாவில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படலாம்; ஆனால் ராஜ்யசபாவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்த்தால் இம்மசோதா நிறைவேற முடியாமல் போகும். அப்படி நிகழ்ந்தால் மத்திய பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவாகும். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியாகவும் இது உருவெடுக்கும். ஆகையால் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் ஒவ்வொரு மாநிலமாக சென்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து, ராஜ்யசபாவில் இம்மசோதாவை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக காங்கிரஸ் கட்சி இம்மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்பதில் ஆம் ஆத்மி உறுதியாக இருக்கிறது. காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டங்களுக்கு ஆம் ஆத்மி இதனை ஒரு முன்நிபந்தனையாகவும் வைத்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஆம் ஆத்மிக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருந்து வருகிறது. இதனால் இரு கட்சிகளிடையே கடும் மோதலும் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே டெல்லியில் வரும் 20-ந் தேதி கூடும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கான வியூகங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற குழு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மோடி கனத்த மவுனமாக இருப்பதை நாடாளுமன்றத்தில் நாங்கள் கேள்வி எழுப்புவோம். மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மீதான மத்திய பாஜக அரசின் தாக்குதலை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மத்திய பாஜக அரசு நேரடியாகவோ அல்லது ஆளுநர்கள் மூலமாகவோ நடத்துகிற இத்தாக்குதல்களை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கிறது என மறைமுகமாக குறிப்பிட்டார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நாளையும் நாளை மறுநாளும் காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் பங்கேற்க உள்ளன. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கையை ஏற்கும் வகையில் காங்கிரஸ் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications