அடுக்கடுக்கான பொய்கள்! 33 தவறுகள்.. இப்படி ஒரு பிரதமரை பார்த்ததே இல்லை! மோடியை விட்டு விளாசிய கார்கே
டெல்லி: மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி அமைந்து 11 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவரை கடுமையாக சாடியுள்ளார். மோடியின் தனது 11 ஆண்டு கால ஆட்சியில் 33 தவறுகளை செய்திருப்பதாகவும், தனது 55 வருட அனுபவத்தில் இப்படி ஒரு பிரதமரை நான் பார்த்ததே இல்லை எனவும் கார்கே சாடியுள்ளார். அளவுக்கதிமான பொய்கள்; இளைஞர்களை ஏமாற்றுதல், ஏழைகளை வஞ்சித்து வாக்குகளை பெறும் ஒரு பிரதமரை நான் பார்த்தது இல்லை என்று கூறியிருக்கிறார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து 11 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வென்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

பாஜக ஆட்சியின் சாதனைகள்
மொத்தமாக அவரது ஆட்சி காலம் 11 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பாஜக தலைவர்கள் பிரதமர் மோடியின் ஆட்சி நிர்வாகத்தால் இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேற்றம் பெற்று இருப்பதாகவும் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை நோக்கி பயணிப்பதாகவும் பாராட்டி வருகிறார்கள். உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி அங்குள்ள 75 மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.
மோடியை விமர்சித்த கார்கே
இப்படியாக பாஜக மோடியின் ஆட்சி நிர்வாகத்தை பாராட்டி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மோடி அளவுக்கு அதிகமாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதாகவும், மோடியை போல் ஒருவரை பார்த்ததில்லை என்றும் கூறியிருக்கிறது. இது தொடர்பாக கார்கே கூறியிருப்பதாவது: -
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 11 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில், இந்த காலக் கட்டத்தில் 33 தவறுகளை மோடி செய்துள்ளார். பிரதமர் மோடி அளவுக்கு அதிகமாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார். இளைஞர்களை வஞ்சித்துள்ளார். நான் அதை நாடாளுமன்றத்திலும் கூறி வருகிறேன். அளவுக்கதிகமான பொய்கள்; இளைஞர்களை ஏமாற்றுதல், ஏழைகளை வஞ்சித்து வாக்குகளை பெறும் ஒரு பிரதமரை நான் பார்த்தது இல்லை.
மோடியை போல் ஒருவரை பார்த்ததில்லை
நான் 55 வருடங்கள் அதிகாரத்தில் இருந்திருக்கிறேன், 65 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன், மோடியை போல் ஒருவரை நான் பார்த்ததில்லை, பிரதமர் எல்லாவற்றுக்கும் பொய் சொல்கிறார், தான் சொல்வதை எதையும் செயல்படுத்துவதில்லை, கேள்வி கேட்டால் அதற்கு எந்த பதிலும் சொல்வதில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, வேலைவாய்ப்பு உருவாக்கம் அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) ஆக இருந்தாலும் சரி எதற்கும் பதில் வரவில்லை.
இது போல பல விஷயங்கள் உள்ளன. மக்களிடம் பொய் சொன்னதையும், தவறு செய்ததையும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதே இல்லை. அதேபோல, மன்னிப்பு கேட்டதும் இல்லை. பிரதமர் மோடி ஒன்றன் பின் ஒன்றாக எதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார். இப்போது 11 வருடங்கள் ஆகிவிட்டன" என்றார்.












Click it and Unblock the Notifications