சோனியாவுடன் லோக்சபாவில் காரசார மோதல்.. ஸ்மிரிதி இரானி வீடு முன்பு காங். நிர்வாகிகள் போராட்டம்!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி வீட்டு முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து கூச்சல், குழப்பம், எம்.பி.க்கள் சஸ்பெண்ட், தர்ணா என மழைக்கால கூட்டத் தொடர் பரபரப்பாக உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ராஷ்டிரபத்னி என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைத்தார். பின்னர், தான் தவறுதலாக கூறிவிட்டதாக அவர் தெரிவித்த போதிலும், அதனை ஏற்க மறுத்து, பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது, என்ன நடந்தது என்பதை அறிவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் ரமா தேவியிடம் சென்றார். அப்போது பாஜகவின் ஸ்மிருதி இரானி, அவரை இடைமறித்ததால், 'நீங்கள் என்னிடம் பேச வேண்டாம்' என ஸ்மிருதி இரானியிடம் சோனியா கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே காரசாரமான வார்த்தைப்போர் ஏற்பட்டது. ஆளுங்கட்சி எம்பிக்களை சோனியா காந்தி மிரட்டியதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தியும், ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவையில் ஸ்மிருதி இரானி வலியுறுத்தினார். குடியரசுத் தலைவர் குறித்து ராஷ்டிரபத்னி என குறிப்பிடும்படி ஆதிர் ரஞ்சன் சௌத்ரியிடம் சோனியா காந்திதான் கூறியதாகவும் ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டினார்.
ஸ்மிருதி இரானியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள ஸ்மிரிதி இரானி வீட்டு முன்பு நேற்று இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் கூறுகையில், 'மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் அநாகரிகமாக நடந்து கொண்டார். பா.ஜனதாவின் போக்கிரித்தனத்தை நாடாளுமன்றம் கண்டது. பா.ஜனதா எம்.பி.க்கள் சோனியா காந்தியுடன் சேர்ந்து நாட்டின் கோடிக்கணக்கான பெண்களையும் அவமதித்துள்ளனர்.
சட்டவிரோத பார் ஊழல் அம்பலமானதையடுத்து ஸ்மிரிதி இரானி கடும் கோபத்தில் இருக்கிறார். அவரது நேற்றைய நடத்தையால், நாடாளுமன்றத்தின கண்ணியம் கெட்டுவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications