நிர்வாண ஊர்வலம்.. கதறிய மணிப்பூர் பெண்கள்! நாடாளுமன்றத்தில் மோடி வாய்திறப்பாரா? காங்கிரஸ் கேள்வி
டெல்லி: மணிப்பூரில் 2 குகி பழங்குடி பெண்களை மைதேயி சமூக இளைஞர்கள் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கும்பலாக பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மௌனம் கலைவாரா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜக ஆளும் மணிப்பூரில் சுமார் 3 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. அம்மாநிலத்தில் வசிக்கும் மைதேயி சமுதாயத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், குகி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் அதற்கு எதிராக கடந்த மே மாதம் 3 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த மைத்தேயி சமுதாயத்தினர் குகி பழங்குடி மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தை தொடங்கினர். பல ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் இதில் தீக்கிரையாக்கப்பட்டன. 135 பேர் உயிரிழந்து இருப்பதாக அரசு தெரிவித்தால் பலி எண்ணிக்கை இதை விட பன்மடங்கு அதிகம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 50 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைக்காக குவிக்கப்பட்டு இருந்தாலும் தினமும் தீ வைப்பு, துப்பாக்கிச்சூடு, வன்முறை, பாலியல் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் அரங்கேறிய கொடூரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தை சேர்ந்த ஆண்கள் கொடூரமாக தாக்கி முழுமையான நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளன.
பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் உலகையே உலுக்கி உள்ளது. மணிப்பூரில் இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் இரண்டரை மாதம் கழித்து இச்சம்பவம் தாமதமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டை எரித்து 2 பெண்களையும் நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கும்பல், 20 வயது இளம் பெண்ணை கும்பலாக பலாத்காரம் செய்ததுடன், இதனை தடுக்க முயன்ற சகோதரரையும் அடித்து கொன்று இருக்கிறது. ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் இந்த சம்பவம் முதலிடத்தில் உள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமரின் அமைதி மற்றும் செயலற்றதன்மையால் மணிப்பூரில் அராஜகம் நடக்கிறது. இந்தியா என்ற எண்ணம் மணிப்பூரில் தாக்கப்படும் போது இந்தியா அமைதியாக இருக்காது. நாங்கள் மணிப்பூர் மக்களுடன் நிற்கிறோம். சமாதானம் ஒன்றே இதனை முன்னோக்கி செல்லும் வழி.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “மணிப்பூரில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் உள்ளத்தை உலுக்குகின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பது மட்டும் போதாது. உச்சக்கட்ட வன்முறையை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டி உள்ளது.
அமைதிக்கான முயற்சிகளை மணிப்பூரில் முன்னெடுத்துச் செல்லும்போது நாம் அனைவரும் ஒரே குரலில் வன்முறையைக் கண்டிக்க வேண்டும். மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களில் மத்திய அரசும், பிரதமரும் கண்மூடித்தனமாக இருப்பது ஏன்? இத்தகைய படங்களும் வன்முறை சம்பவங்களும் அவர்களை தொந்தரவு செய்யாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், “இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு 11 ஆம் தேதி நிறைவடைகிறது. மணிப்பூரின் சமூகக் கட்டமைப்பை அழித்துக் கொண்டிருக்கும் கொடூரம் பற்றி விவாதம் நடத்த மோடி அரசு அனுமதிக்குமா? பிரதமர் தனது அமைதியை கலைத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாதையில் நாட்டை அழைத்து செல்வாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications