சீனாவிலிருந்து இறக்குமதி ஆகவுள்ள இந்திய தேசிய கொடிகள்! அனுமதி அளித்த மத்திய அரசு! விளாசும் காங்கிரஸ்
டெல்லி: பாலியஸ்டர் தேசியக் கொடிகளை இறக்குமதி செய்வது குறித்த சட்ட திருத்தத்தைக் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பாலியஸ்டர் தேசியக் கொடிகளைத் தயாரிக்கவும் இறக்குமதி செய்யவும் அனுமதி அளிக்கும் வகையிலான தேசியக் கொடி கொள்கை திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவைக் கடுமையாகச் சாடியுள்ள காங்கிரஸ், ஆளும் பாஜகவை "போலி தேசியவாதி" என்றும் சாடியுள்ளது. மேலும் இதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

காங்கிரஸ் சாடல்
இது தொடர்பாகக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜோய் குமார் கூறுகையில், "லடாக்கில் 1,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை இன்னும் கூட சீனா ஆக்கிரமித்து உள்ளது. இந்த நேரத்தில், சீனாவில் இருந்து இந்தியக் கொடிகளைப் பெருமளவில் இறக்குமதி செய்வதற்கான கதவைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கர்நாடக காதி கிராமோத்யோக சம்யுக்த சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. இதற்குக் காங்கிரஸ் முழுமையாக ஆதரிக்கிறது.

பிரதமர் மோடி
இந்தியாவின் காதித் தொழிலின் பாதுகாவலராக மோடி தன்னைக் காட்டிக் கொள்கிறார். கடந்த ஆண்டு தனது 'மன் கி பாத்' உரையில் 'காதி' பொருட்களை வாங்குமாறு இந்தியர்களுக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். இந்தியர்கள் உள்ளூர் வியாபாரிகளை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் அவரது முடிவுகள் அதற்கு நேர்மாறாக உள்ளது.

இறக்குமதி
வல்லபாய் சிலைக்கான வெண்கலத்தையும் அது இறக்குமதியைச் செய்துள்ளது. கடந்த 2021-22ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து இறக்குமதியில் செய்யப்படும் பொருட்கள் 45 சதவீதம் அதிகரித்து உள்ளது. இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலியஸ்டர் கொடிகளை இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலம், பிரதமர் மோடி, காதியின் அடிநாதத்தையும் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தையும் தாக்கியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதை உறுதி செய்துள்ளது.

போலி தேசியவாதம்
காதியின் காப்பாளராகத் தன்னை காட்டிக் கொள்ளும் அவரே காதியின் மரணத்திற்குக் காரணமாக உள்ளார். நாடு இப்போது 75ஆவது ஆண்டு நிறைவு செய்யும் சூழலில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. விடுதலை போராட்டம் குறித்து எந்தவொரு புரிதலும் இல்லாத நமது போலி தேசியவாத ஆளும் கட்சி குறித்த அப்பட்டமான நினைவூட்டல் தான் இது. இந்திய மூவர்ணக் கொடி தேசத்தின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையின் சின்னம். எளிய மக்கள் எப்படி ஒன்று சேர்ந்து வலிமைமிக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எப்படி வீழ்த்தினார்கள் என்பதன் அடையாளமே 'காதி'.

காதி
இது ஆன்மீக பணிவு, தேசிய ஒருமைப்பாடு, சமூக சமத்துவம், மத நல்லிணக்கம் மற்றும் அகிம்சை ஆகியவற்றின் அடையாளம் ஆகும். இந்த மதிப்புகள் பாஜக மற்றும் அதன் முன்னோடிகளுக்கு அந்நியமானவை. அவர்கள் சுதந்திர இயக்கத்தில், தேசியக் கொடி வடிவமைப்பதில் அல்லது காதியை பிரபலப்படுத்துவதில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. "தேசியவாத சக்திகளை" தகர்ப்பதற்காக முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்த இந்து மகாசபாவால் பாஜக ஈர்க்கப்பட்டுள்ளது" என்று குமார் கூறினார்.

நாக்பூர்
அதேபோல மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷும் இதைச் சாடி இந்தியில் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள், நாக்பூரில் 52 ஆண்டுகளாக மூவர்ணக் கொடியை ஏற்றாதவர்கள், மூவர்ணக் கொடிக்கும் காதிக்கும் நமது நாட்டிற்கும் இருக்கும் உறவு எப்படிப் புரிந்துகொள்வார்கள். பாலியஸ்டர் மூவர்ணக் கொடியை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் மூலம், சீனாவின் மூவர்ணக் கொடி நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சீனா தான் நமது நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications