அற்பத்தனம்.. எப்பதான் திருந்துவீங்க? ராகுல் பின் வரிசையில் அமரவைக்கப்பட்டதால் காங்கிரஸ் கொதிப்பு!
டெல்லி: இன்றைய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடைசிக்கு முந்தைய வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளது காங்கிரஸ் கட்சி. ஐம்பதாவது வரிசையில் அமர்ந்திருந்தாலும் ராகுல் எப்போதும் மக்களுக்கு ஒரு தலைவராகவே இருப்பார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து 11 ஆம் முறையாக சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிய பெருமையை பெற்றார். முப்படை வீரர்கள், துணை ராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. ராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

சுதந்திர தின நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். 2014 ஆம் ஆண்டு முதல் லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் இருந்த நிலையில், 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பெற்றதால் காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கேபினட் அமைச்சர் பதவிக்கு நிகரானது என்பதால் சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களில் எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்வரிசையில் மத்திய அமைச்சர்களுக்கு சமமாக இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். ஆனால் இன்று சுதந்திர தின விழாவில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை. முன்வரிசையில் மத்திய அமைச்சர்கள்தான் அமர்ந்திருந்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவைத் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பின் இருக்கையில் அதாவது கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் ஐந்தாவது வரிசையில் அமர்ந்திருந்தார். ராகுல் காந்தி பின் இருக்கையில் அமர்ந்திருந்த புகைப்படமானது, சமூக வலைதளங்களில் பரவியது. ஏன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை என பலரும் கேள்வி எழுப்பினர்.
சுதந்திர தின கொண்டாட்டத்தில் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். முன் வரிசையில் உள்ள இருக்கைகள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டதால், எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையை கடைசி வரிசைக்கு மாற்ற வேண்டியிருந்தது என்று சுதந்திர தின நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு பொறுப்புள்ள பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்திக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரீயா ஸ்ரீனேட் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சுப்ரீயா ஸ்ரீனேட் கூறுகையில், "குறுகிய மனப்பான்மை கொண்டவர்களிடமிருந்து பெருந்தன்மையான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. சுதந்திர தின நிகழ்ச்சியின்போது, ராகுல் காந்தியை ஐந்தாவது வரிசையில் அமரவைத்த மோடியின் முடிவு அவரது விரக்தியைப் பிரதிபலிக்கிறது.
இந்த நிகழ்வு ஜனநாயகம், ஜனநாயக மரபுகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மீதான மரியாதை இல்லாமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நிகழ்ச்சி ஒலிம்பிக் வீரர்களைக் கௌரவிக்கும் நோக்கம் கொண்டதால் ராகுலுக்கு கடைசி இருக்கை அமைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் அமித் ஷா, ஜே.பி. நட்டா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் போன்ற முக்கிய தலைவர்களுக்கு மட்டும் எப்படி முன் வரிசையில் இருக்கை கிடைத்தது?
எதிர்க்கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருக்கு நிகரான பதவியையே வகிக்கிறார். பொதுப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில் எதிர்க்கட்சித் தலைவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஆனால், அற்ப மனப்பான்மை கொண்டவர்கள் ஜனநாயகம் மற்றும் அதன் மரபுகளை புறக்கணிக்கிறார்கள். ராகுல் காந்தி ஐந்தாவது வரிசையில் அமர்ந்தாலும் சரி அல்லது ஐம்பதாவது வரிசையில் அமர்ந்திருந்தாலும் சரி; அவர், எப்போதும் மக்களுக்கு ஒரு தலைவராகவே இருப்பார். ஆனால், நீங்கள் எப்போது இந்த மாதிரியான செயல்களை நிறுத்தப் போகிறீர்கள்?" என்று ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு மட்டுமல்லாமல், ராஜ்யசபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் ஐந்தாவது வரிசையிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், மல்லிகார்ஜுன கார்கே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications