85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறிய செல்வப்பெருந்தகை, 85% வேட்பாளர்கள் கண்டறியப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 21 நாட்களே இருக்கும் நிலையில், தேசியக் கட்சிகள் தவிர்த்து அத்தனை கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆனால் திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை, துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர், பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஏப்ரல் 6ஆம் தேதி கடைசி நாளாகும். இதனால் அடுத்த 2 நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய கூடிய கூட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அதுமட்டுமல்லாமல் செல்வப்பெருந்தகை மற்றும் கிரிஷ் சோடங்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டன. இதனால் புதிய வேட்பாளர்கள் பட்டியலை கொண்டு வர ராகுல் காந்தி அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் மீண்டும் இன்று கூடியது. ராகுல் காந்தி மற்றும் கார்கே தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 85% தொகுதிகளில் வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டனர். மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்டுவிடுவார்கள். இன்று இரவோ அல்லது நாளை காலையோ வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
காங்கிரஸ் அகில இந்திய கட்சி என்பதால், நிறைய ஆய்வுகள் செய்கிறோம். வேட்பாளர்கள் தேர்வில் எந்த சிக்கலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் இன்னும் சற்று நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications