NEET கட்டாயமில்லை.. இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கம்! தமிழகத்தில் கவனம் பெற்ற காங்.தேர்தல் அறிக்கை
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நீட், கியூட் உள்ளிட்ட தேர்வுகள் குறித்தும், இடஒதுக்கீடு குறித்தும் கூறியிருப்பது தமிழக மக்களிடையே கவனம் பெற்றிருக்கிறது.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணி எனும் பெயரில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இன்று தனது தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் நீட், கியூட் உள்ளிட்ட தேர்வுகள் குறித்தும், இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு தமிழகத்தில் கவனம் பெற்றிருக்கிறது.

நீட் தேர்வு: தமிழகத்தின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக நீட் தேர்வு ரத்து என்பது இருந்து வருகிறது. மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலான மருத்துவச் சேர்க்கை, நகர்ப்புற மாணவர்களுக்கும், அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறக்கூடிய மாணவர்களுக்குமே சாதகமாக உள்ளது.
அடிப்படையிலேயே ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இந்தத் தேர்வு முறை உள்ளது. நீட் போன்ற நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதை விட, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டுமென்றும், நுழைவுத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பது தமிழகத்தின் கருத்தாக இருக்கிறது.
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, நீட், கியூட் உள்ளிட்ட தேர்வுகள் மாநிலத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது. மாநிலங்கள் விருப்பப்பட்டால் நடத்திக்கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இடஒதுக்கீடு உச்சவரம்பு: அதேபோல இடஒதுக்கீடு உச்சவரம்பு 50%லிருந்து உயர்த்தப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்திருப்பது தமிழக மக்களிடையே கவனம் பெற்றிருக்கிறது. கடந்த 1920ல் அப்போது நடந்த மெட்ராஸ் மாகாண பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிப் பெற்றது. அதன் பின்னர்தான் அரசு பணிகளிலும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீடு முறை அமலில் வந்தது.
இத்துடன் நின்றுவிடாமல், 1921ம் ஆண்டு ஒரு முக்கிய சட்டமும் இயற்றப்பட்டது. அதாவது, ஒவ்வொரு அரை ஆண்டும் அரசு பணிகளில் எந்தெந்த சாதியினர், எவ்வளவு பேர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்கிற விவரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. இப்படியா ஒட்டுமொத்த இந்தியாவுக்கே, இடஒதுக்கீடு முறையில் முன்னோடியாக திகழ்ந்த தமிழ்நாடு, கடந்த சில ஆண்டுகளாகவே 50% ஆக இருக்கும் இடஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், பழங்குடியின, பட்டியல், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்கிற விவரம் தெரிய வரும். இவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீடு சதவிகிதம் போதாது, எனவே இதனை உயர்த்த வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை வைத்து வந்தது. இந்நிலையில், 50% ஆக இருக்கும் இடஒதுக்கீடு உச்சவரம்பை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உயர்த்துவோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தமிழகத்தில் வரவேற்பை பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications