விமானத்தில் சிகரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் புதிய துபாய் பயண வீடியோ!
டெல்லி: விமானத்தில் சிகரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்டாகிராம் பிரபலமான பாபி கட்டாரியா, இந்திய சுதந்திர தினத்தை துபாயில் கொண்டாட போவதாக புதிய வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பாபி கட்டாரியா. சினிமா பாடல்களுக்கு நடனமாடுவது; திரைப்பட வசனங்களை பேசுவது போன்ற பொழுதுபோக்கு வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் இவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பாபி கட்டாரியா புகைப்பிடிக்கும் வீடியோ ஒன்று நேற்று முதல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. விமானத்தில் புகைப்பிடிப்பது மிகவும் அபாயகரமானது மட்டுமின்றி சட்டப்படி குற்றம் என்பதால் பாபி கட்டாரியாவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இந்த வீடியோவை பலர் ட்விட்டரில் டேக் செய்தனர். இதனை பார்த்த சிந்தியா, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, பாபி கட்டாரியா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து ஸ்பைஸ் ஜெட் நிர்வாகமும் விளக்கம் அளித்தது. அதில், இச்சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றதாகவும், இதற்காக பாபி கட்டாரியாவுக்கு 15 நாட்கள் விமானங்களில் பறக்க தடைவிதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், பெரும் தவறை செய்திருக்கும் பாபி கட்டாரியாவுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதிய வீடியோ
இந்நிலையில், பாபி கட்டாரியா இன்ஸ்டாகிராமில் புதிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், இந்திய சுதந்திர தினத்தை துபாயில் கொண்டாடப் போவதாக கட்டாரியா சிரித்துக் கொண்டே கூறுகிறார். இந்த வீடியோவால் கடுப்பான நெட்டிசன்கள், பாபி கட்டாரியாவை வெளிநாட்டுக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications