இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. ஒரே வாரத்தில் சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.10 குறைய வாய்ப்பு!
டெல்லி: இந்தியாவில் ஒரே வாரத்தில் சமையல் எண்ணெய் விலையானது லிட்டருக்கு ரூ.10 வரை குறைய வாய்ப்புள்ளது என மத்திய உணவுத்துறை செயலாளர் சுதான்சு பாண்டே கூறினார்.
இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் 40 சதவீதத்தை மட்டுமே உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்கிறது. மீதம் 60 சதவீத சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதனால் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து சமையல் எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படும். இந்நிலையில் சமீபக காலமாக சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வருகிறது.

தொடர்ந்து சரியும் விலை
இதனால் கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை குறைக்கப்பட்டது. தற்போதும் சர்வதேச சந்தை விலை தொடர்ந்து சரிவை சந்திக்கிறது. இதனால் இன்னும் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உணவு செயலாளர் சுதன்சு பாண்டே அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பெரும் உற்பத்தியாளர்கள் உடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டம்
இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. விலை குறைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையின்போதும் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு நுகர்வோர் உரிமையை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகள் பற்றி மத்திய உணவு துறை செயலாளர் சுதன்சு பாண்டே கூறியதாவது:

லிட்டருக்கு ரூ.10 குறைப்பு
சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சமையல் எண்ணெய் விலை 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் பலன் முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு சென்றடைய வேண்டும். இதுதொடர்பாக கூட்டத்தில் எடுத்து கூறப்பட்டது. லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை பலர் ஏற்றுக்கொண்டனர். அடுத்த வாரத்துக்குள் பாமாயில், சோயாபீன், சன்பிளவர் ஆயில் போன்ற இறக்குமதி எண்ணெய்களின் விலையை ரூ.10 குறைப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

ஒரேமாதிரியான விலை
இந்த எண்ணெய்கள் விலை குறைந்தால், இதர சமையல் எண்ணெய்கள் விலையும் குறைந்துவிடும். மேலும், ஒரே கம்பெனியின் சமையல் எண்ணெய் விலை, வெவ்வேறு மண்டலங்களில் ரூ.3 முதல் ரூ.5 வரை வேறுபாடாக இருக்கிறது. எனவே, நாடு முழுவதும் ஒரே மாதிரி விலையை நிர்ணயிக்குமாறு கூறினோம். இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்'' என்றார்.

நுகர்வோர் பாதிப்பு
மேலும் இந்த கூட்டத்தில் கூட்டத்தில் சமையல் எண்ணெய் பிராண்டுகளுக்கு எதிராக அதிகரித்து வரும் நுகர்வோர் புகார்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதாவது சில நிறுவனங்கள் சமையல் எண்ணெயை 15 டிகிரி செல்சியஸில் பேக் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன. இதனால் விரிவடையும்போது அதன் எடை குறையும். ஆனால் குறையும் எடையின் அளவு பாக்கெட்டில் குறிப்பிடப்படவில்லை. இதனால் 910 கிராம் பாக்கெட்டின் உண்மையான எடை என்பது 900 கிராமாக தான் உள்ளது. இது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல். இது தவிர்க்க 30 டிகிரி செல்சியஸில் எண்ணெய் பாக்கெட்டுகள் பேக் செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications